ADDED : மே 21, 2024 11:03 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில், கல்லாதவர்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடக்கிறது. முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலமாக, 15 வயதிற்க்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கிடும் வகையில், புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் எழுத படிக்க தெரியாத, 600க்கும் மேற்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். துறிஞ்சிப்பட்டி கவுண்டம்பட்டி காளிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் கல்லாதவர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் வட்டார ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி வரும், 27 வரை நடக்கிறது.

