ADDED : ஏப் 04, 2024 04:41 AM
பாப்பிரெட்டிப்பட்டி-: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பையர் நத்தம் ஊராட்சியில் கதிரிபுரம், பையர்நத்தம், அம்பேத்கர் காலணி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இதில், அம்பேத்கர் காலனி பகுதியில், கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் குடிநீர் வழங்கப் படுவதில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். குடிநீர் இல்லாமல், அவதிப்பட்டு
வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணியளவில் குடிநீர் கேட்டு பையர்நத்தம், அம்பேத்கர் காலனி பகுதியில், பொம்மிடி -- பாப்பிரெட்டிப்பட்டி ரோட்டில் காலி குடங்களை வைத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா, பொம்மிடி எஸ்.ஐ., விக்னேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, 10:30 மணிக்கு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

