/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடும்ப வறுமையால் டீ விற்று படித்து வந்த மாணவனுக்கு வீடு
/
குடும்ப வறுமையால் டீ விற்று படித்து வந்த மாணவனுக்கு வீடு
குடும்ப வறுமையால் டீ விற்று படித்து வந்த மாணவனுக்கு வீடு
குடும்ப வறுமையால் டீ விற்று படித்து வந்த மாணவனுக்கு வீடு
ADDED : அக் 29, 2024 01:22 AM
குடும்ப வறுமையால் டீ விற்று
படித்து வந்த மாணவனுக்கு வீடு
பென்னாகரம், அக். 29-
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர்கள் சையத்பாஷா - -வாஹிரா தம்பதி. இவர்களுக்கு அப்சர், 15, மிஸ்பா, 13, என, 2 மகன்கள். இதில் அப்சர், 10-ம் வகுப்பும், மிஸ்பா, 8ம் வகுப்பும், அரசு பள்ளியில் படிக்கின்றனர். சையத்பாஷா மாற்றுத்திறனாளி என்பதால், அவரை மனைவி வாஹிரா பராமரித்து வருகிறார். போதிய வருவாயின்றி, மருத்துவ செலவுக்கும் சிரமப்பட்டனர். இதனால், சிறுவன் அப்சர் தினமும் அதிகாலை, 4:00 மணிக்கு எழுந்து, டீ தயார் செய்து, ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சென்று, 8:00 மணி வரை டீ விற்று விட்டு, பள்ளிக்கு செல்கிறான். அதில் கிடைக்கும் வருவாயை வைத்து குடும்பம் நடந்து வந்தது.
சிறுவன் டீ விற்பதை பார்த்த சிலர், அதை வீடியோ எடுத்து வைரலாக்கினர். இதை கண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே செயல்பட்டு வரும், தனியார் அறக்கட்டளை, குடும்ப வறுமையால் சிறுவன் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என, மாதந்தோறும், 7,500 உதவி செய்ய முன்வந்தனர். இந்த உதவியை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி மூலமாக சிறுவனுக்கு வழங்கினர். அப்போது கலெக்டர் சாந்தி, சிறுவனுக்கு உதவி செய்வதாக தெரிவித்தபோது, சொந்த வீடு இல்லை என சிறுவன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை, மாவட்ட கலெக்டர் சார்பில், 50 சதவீதம் செலுத்துவதாகவும், அறக்கட்டளையினர் மீதமுள்ள, 50 சதவீத தொகையை செலுத்தினால், உடனடியாக வீடு ஒதுக்கி தருவதாக தெரிவித்தார். அறக்கட்டளையினர், 50 சதவீத பணத்தை கொடுப்பதாக உறுதியளித்தனர். நேற்று, பென்னாகரம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டின் சாவியை, சிறுவனின் குடும்பத்தினரிடம், மாவட்ட கலெக்டர் சார்பில், அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

