/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின்வேலியில் சிக்கி வாலிபர் பரிதாப பலி
/
மின்வேலியில் சிக்கி வாலிபர் பரிதாப பலி
ADDED : அக் 15, 2025 01:37 AM
அரூர், அரூர் அருகே, விவசாய நிலத்தில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி வாலிபர் பலியானார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புதுகொக்கராப்பட்டியை சேர்ந்தவர் வேலுமணி, 30, இவர், கம்ப்ரசர் மற்றும் கிரேன் வைத்து கிணறு வெட்டும் தொழில் செய்து வந்தார்.
கடந்த, நான்கு மாதங்களாக அரசநத்தம் கிராமத்தில் கிணறு வெட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு அரசநத்தம் சென்று வருவதாக கூறிச் சென்ற வேலுமணி, நேற்று காலை வரை வீட்டிற்கு வரவில்லை.
இதையடுத்து, வேலுமணியின் மனைவி கவுசல்யா, 27, உறவினர்களுடன் அரசநத்தம் சென்று தேடி பார்த்த போது, புளியந்தோப்பு வளவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது நெல் வயலில் வேலுமணி இறந்து கிடந்தார். அவரது உடலில் சில இடங்களில் கருகியும், தோல் உரிந்தும் இருந்தது.
மேலும், அவர் ஓட்டிச் சென்ற ஹீரோ ஸ்பிளண்டர் பைக் மற்றும் செருப்பு, அவர் அணிந்திருந்த சட்டை ஆகியவை மகேந்திரன் என்பவரது வீட்டின் முன் இருந்தது.
இது குறித்து கவுசல்யா அளித்த புகார்படி, அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், நெல் வயலில் எலிகள் நுழையாமல் தடுக்க அமைக்கப்படிருந்த மின்வேலியில் சிக்கி வேலுமணி உயிரிழந்தது தெரிய வந்தது.