/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பா.ஜ., நிர்வாகி மீது அ.தி.மு.க.,வினர் தாக்குதல்
/
பா.ஜ., நிர்வாகி மீது அ.தி.மு.க.,வினர் தாக்குதல்
ADDED : ஏப் 16, 2024 06:58 AM
தர்மபுரி : பா.ம.க.,வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட, பா.ஜ., ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் மற்றும் அவரது உறவினர்கள் மீது, அ.தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எர்ரனஹள்ளி பஞ்., உட்பட்ட கக்கன்ஞ்சிபுரம் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. அங்கு நேற்று முன்தினம், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, பா.ஜ., ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், 29, அன்னதானம் வழங்கினார். அப்போது, பா.ஜ., கூட்டணி கட்சியான, பா.ம.க.,விற்கு ஓட்டு சேகரித்தார். இதில், கோபமடைந்த அப்பகுதி, அ.தி.மு.க.,வினர், அவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இது குறித்து, வெங்கடேசன் கூறியதாவது: நேற்று முன்தினம் அம்பேத்கர் பிறந்தநாளில், என் தலைமையில் ஊர்மக்கள் சேர்ந்து, காலையில் அன்னதானம் வழங்கி, மாலையில் நிகழ்ச்சிகள் நடத்தினோம். அப்போது, பா.ம.க., வேட்பாளர் சவுமியாவிற்கு ஆதரவாக, ஆதிதிராவிடர் காலனி பகுதி முழுவதும், பா.ம.க., சாதனைகள் குறித்து, வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கி, ஓட்டு சேகரித்தேன். இதில், கோபமடைந்த, அ.தி.மு.க.,வினர் என்னை தாக்கினர்.
காப்பாற்ற வந்த, உறவினர்களான சேட்டு, 45, கண்ணையன் 71, கமலா 59, தெய்வானை 38, ஆகியோர் மீதும், கற்களை கொண்டு கொடூரமாக தாக்கினர். இதில், அனைவருக்கும் தலையில் படுகாயம் ஏற்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். அ.தி.மு.க.,வினர் மீது, போலீசில் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

