ADDED : நவ 06, 2025 12:51 AM
அரூர், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று அன்னாபிஷேகம் நடந்தது.
அதன்படி, தர்மபுரி மாவட்டம், அரூர் சந்தைமேட்டிலுள்ள வாணீஸ்வரி அம்மன் உடனமர் வாணீஸ்வரர் கோவிலில், நேற்று காலை அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு காய்கறிகள், பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது.
இதேபோல், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்
பட்டது.
* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில் அன்னாபிஷேகம் விழா மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. இதில், மஹா அன்னாபிஷேக சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை
நடந்தது.
தொடர்ந்து அன்னாபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். விழா குழுவினர் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* கடகத்துார் சோமேஸ்வரர், அதியமான்கோட்டை சோமேஸ்வரரர், தர்மபுரி டவுன் கடைவீதியில் உள்ள மருதவனேஸ்வரரர், நெசவாளர் காலனியில் உள்ள மகாலிங்கேஸ்வரரர் கோவில், தொப்பூர் ஞானலிங்கேஸ்வரர், வத்தல்மலை அருணாச்சலேஸ்வரர், பாலக்கோடு பால்வண்ணநாதர் உட்பட பல்வேறு சிவன் கோவில்களில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
இதில், மூலவருக்கு அன்னம் மற்றும் பல்வேறு காய்கறிகள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டது. சுவாமிக்கு அலங்காரம் செய்த அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

