ADDED : ஏப் 24, 2025 01:25 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, கிழக்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அவரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும், நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சிவபிரகாசம், முன்னாள் பொதுச் செயலாளர்கள் கோவிந்தராஜ், சங்கர், தேசிய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் முனவரி பேகம், நகர தலைவர் விமலா, கவுன்சிலர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஹிந்துக்களின் அடையாளங்களை கொச்சைப்படுத்தி பேசி, அனைவர் மனதையும் புண்படுத்திய அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரை போலீசார் கைது செய்து, வழக்கு தொடர வேண்டும்.
ஹிந்து மக்களை கேவலமாக பேசிய அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, பொன்முடியின் படத்தை, செருப்பால் அடித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். போலீசார் அவர்களை தடுத்ததால், சிறிது தள்ளு முள்ளு ஏற்பட்டது. டி.எஸ்.பி., முரளி தலைமையில், 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக, ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, 27 சுற்றுலா பயணிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தி, அவர்களது படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

