ADDED : அக் 27, 2026 06:23 AM
தர்மபுரி: தர்மபுரி டவுன் பகுதியில் ஓடும் சனத்குமார் ஆற்றில், ரசாயன கழிவு கலப்பால், ஆற்று நீரில் ரசாயன நுரை தேங்கி வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறுகளில் முக்கியமானதாக, சனத்குமார் ஆறு உள்ளது. சனத்குமார் ஆறு தர்மபுரி நகரின் வழியாக பாய்ந்து, 26 கி.மீ., பயணித்து கம்பைநல்லுார் அடுத்த இருமத்துாரில் தென்பெண்ணையாற்றில் கலக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன், இந்த ஆற்றின் நீரை புனித நீராக மக்கள் பயன்படுத்தினர். இந்த ஆறு பல்வேறு ஏரிகளுக்கு நீராதாரமாக இருந்தது. இதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆண்டு முழுவதும் சரத்குமார் ஆற்று பகுதியில் விவசாயம் செழிப்பாக இருந்தது.ஆற்று பகுதியில் ஆக்கிரமிப்பு, சாக்கடை நீர் கலப்பு உள்ளிட்டவற்றால், சனத்குமார் ஆறு பராமரிப்பின்றி சாக்கடை கழிவு
நீர் ஓடும் கால்வாயாக மாறியது. நீண்ட காலமாக துார்வாராததால், ஆறு முழுவதும் சாக்கடை நீர் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. குறிப்பாக, ஏமகுட்டியூர், பாரதிபுரம், அன்னசாகரம், குப்பாண்டி தெரு, காமாட்சி அம்மன் தெரு, மதிகோன்பாளையம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களில் சாக்கடை நீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தர்மபுரி நகர பகுதியில் ஆற்றில், 7 கி.மீ., தொலைவிற்கு கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், குப்பை கொட்டும் இடமாக ஆறு மாறியுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஆற்று பகுதியிலுள்ள கழிவு அனைத்தும் அடித்து சென்று, ஆறு சுத்தமாகும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தர்மபுரி டவுன் பகுதியில், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து ரசாயன கழிவு ஆற்றில் வெளியேற்றப் பட்டதால், ஆற்று பகுதியில் ஆங்காங்கே ரசாயன நுரை தேங்கி, நிலத்தடி நீர்மட்டம் மேலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ரசாயன கழிவு கலப்பது குறித்து, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
