/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'காங்., தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை'
/
'காங்., தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை'
ADDED : ஏப் 08, 2024 07:19 AM
கிருஷ்ணகிரி : ''மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரலாம் என்ற நினைப்பில், தி.மு.க., - காங்., கட்சிகள் நிறைவேற்ற முடியாத திட்டங்களை தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளன,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரியில் நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: காங்., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்துள்ளனர். அவர்களது கூட்டணியிலுள்ள, தி.மு.க., கடந்த, 2019 தேர்தலின் போது ஏழை குடும்பங்களுக்கு மாதம், 6,000 ரூபாய், 100 நாள் வேலையை, 150 நாட்களாக மாற்றுவோம், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என, பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றினர். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தொடர்ந்து, 2021 சட்டசபை தேர்தலிலும் பொய் வாக்குறுதிகளை அறிவித்து, ஆட்சியை பிடித்தனர். தற்போது, காங்., கட்சியும் பொய்யான வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக கொடுத்து, மக்களை ஏமாற்ற தயாராகியுள்ளது.
கடந்த, 2022 கணக்கீட்டின்படி இந்தியாவில், 32 கோடி குடும்பங்கள் உள்ளன. அதில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, 10 கோடி என்றால் கூட, ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம், 10 லட்சம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டி வரும். பா.ஜ., டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தவர் இ.பி.எஸ்., தான். ஆகவே, இம்முறை மற்ற கட்சிகள், எந்த பொய் வாக்குறுதிகள் கொடுத்தாலும் அதை, மக்கள் நம்ப மாட்டார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.

