ADDED : ஆக 22, 2025 01:32 AM
தர்மபுரி, தர்மபுரி அருகே, வெங்கடம்பட்டி ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம், மாதேமங்கலம் பஞ்.,ல் வெங்கடம்பட்டி ஏரி உள்ளது. இது அங்குள்ள மேய்ச்சல் கால்நடைகளுக்கும் மற்றும் நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியில், கிராம மக்கள் சார்பில், மீன் குஞ்சுகள் விடபட்டிருந்தது. நேற்று காலை ஏரியில் இருந்த மீன்கள் கரையோரம் செத்து மிதந்தன. ஏரி நீரில், விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், ஏரிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதை தவிர்த்தனர்.
கால்நடைகள் மற்றும் விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பிற்கு ஆதாரமாக இருந்த ஏரியில், இதுபோன்ற செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, தகவலறிந்த மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

