ADDED : பிப் 06, 2025 05:52 AM
காரிமங்கலம் மலைக்கோவில்
அறங்காவலர் குழு தேர்வு
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அறங்காவலர் குழு தேர்வு நேற்று நடந்தது.
கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி ஆணையர் மகாவிஷ்ணு தலைமை வகித்தார். இதில், குழு உறுப்பினர்களாக கவுன்சிலர் ரமேஷ், ஹரி, சுரேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின், கொள்ளுப்பட்டி மாது அறங்காவலர் குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, ஊர் முக்கிய பிரமுகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில், முன்னாள் தலைவர் கவுரி, கோவில் அர்ச்சகர் புருஷோத்தமன்
உள்பட பலர் பங்கேற்றனர்.
சமையல் காஸ் சிலிண்டர் வெடித்துவீடு இழந்தோருக்கு நிவாரணம்
பாப்பாரப்பட்டி-
பாப்பாரப்பட்டி அருகே, மோட்டுப்பட்டியில் சமையல் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில், 5 வீடுகள் இடிந்தன. கல்லுாரி மாணவி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி வீடு இடிந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் நிதி வழங்கினார். இவருடன், பா.ம.க., மாவட்ட தலைவர் செல்வக்குமார், பென்னாகரம் தொகுதி பொறுப்பாளர் சுதா கிருஷ்ணன் உடனிருந்தனர்.
இதேபோல, விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, நிவராண நிதி வழங்கினார். பாலக்கோடு கிழக்கு ஒன்றிய, தி.மு.க., ஒன்றிய செயலாளர் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் தங்கமணி உள்ளிட்ட ஏராளமனோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு உழவர் பேரியக்கஆலோசனை கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அம்மாபாளையம் பச்சையம்மன் கோவில் வளாகத்தில், பா.ம.க., தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இயக்க மாநில செயலாளரான, முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி தலைமை வைத்தார். பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை கழிவு நீரால், விவசாயிகள், கால்நடைகள் பொதுமக்கள்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை கண்டித்தும், கரும்பு விவசாயிகளின் உண்மையான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பா.ம.க., தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் வரும், 17ல் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரூ.39 லட்சத்துக்குமாடுகள் விற்பனை
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூரில், நேற்று கூடிய சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 210 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
கலப்பின மாடு ஒன்று, 45,000 முதல், 73,000 ரூபாய் வரை விற்பனையானது. அதே போல், வளர்ப்பு மாட்டுக் கன்று ஒன்று, 6,000 முதல், 29,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், 39 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
போலி சித்தா மருத்துவர் கைது
தர்மபுரி, பிப். 6-
தர்மபுரி மாவட்டம், ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரை சேர்த்த ரமேஷ்குமார், 47. இவர், பி.எஸ்சி., தாவரவியல் படித்துள்ளார். ஒட்டப்பட்டி உழவர் சந்தை அருகே, வாடகை வீட்டில், சித்தா மருந்து தயாரித்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, தர்மபுரி மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் சாந்திக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் உமா தலைமையில், அதிகாரிகள் மற்றும் போலீசார் ரமேஷ்குமார் நடத்தி வந்த நிஷா மூலிகை மருந்தகம் மற்றும் நீராவி குளியலகத்தில், நேற்று முன்தினம் மாலை சோதனை நடத்தினர்.
இதில், அவர் தஞ்சை பல்கலைக்கழகத்தில், 6 மாத சித்தா சான்றிதழ் படிப்பு படித்ததும், வேறு ஒருவரின் சான்றிதழை வைத்து மருத்துவம் பார்த்து வந்ததும், தாவரவியல் படித்த அனுபவத்தில், மூலிகைகளை பயன்படுத்தி சித்தா மருந்துகளை தயாரித்து, மருத்துவம் பார்த்ததும் தெரியவந்தது. புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் ரமேஷ்குமாரை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய படிப்பு சான்றிதழ் மற்றும் தயாரித்து வைத்திருந்த மருந்து, மாத்திரைகளை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.