/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர், நரிப்பள்ளியில் நெல் கொள்முதலை துவக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
/
அரூர், நரிப்பள்ளியில் நெல் கொள்முதலை துவக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
அரூர், நரிப்பள்ளியில் நெல் கொள்முதலை துவக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
அரூர், நரிப்பள்ளியில் நெல் கொள்முதலை துவக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 18, 2025 01:22 AM
அரூர் :அரூர் மற்றும் நரிப்பள்ளியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்யும் பணியை துவங்க, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., செம்மலை தலைமை வகித்தார். கூட்டத்தில் திருமலை, ராஜ்குமார், சுரேஷ் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பேசியதாவது:
அச்சல்வாடி கதவனேரியில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், கோடிநீர் வெளியேறும் இடத்தில் ஷட்டர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். புதுப்பட்டி பகுதி யில் பொதுப்பாதையில் செல்ல சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாப்பிரெட்டிப்பட்டியில் செயல்படும் தனியார் மரவள்ளி கிழங்கு அரவை ஆலை, பீணியாற்றில் தண்ணீரை திருடுவதுடன், கரையை ஆக்கிரமிப்பு செய்து, சுத்திகரிப்பு செய்யாமல் அதன் கழிவு நீரை ஆற்றில் விடுகின்றனர். இதனால், 5 பஞ்சாயத்துகளில், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. பீணியாற்றில் தண்ணீர் திருட்டு நடந்த போதிலும் பொதுப்பணித்துறையினர் அபராதம் விதிக்கவில்லை. மாசு கட்டுப்பாட்டுத் துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அரூர் பகுதியில், நடப்பாண்டு, 30,000 ஏக்கரில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, முத்தரப்பு கூட்டம் நடத்தி, மரவள்ளிகிழங்குக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கடந்த மார்ச் மாதம், அரூர் மற்றும் நரிப்பள்ளியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. அதில், கடந்த, ஒன்றரை மாதங்களாக நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, அம்மையங்களில், கூரை மற்றும் சரியான எடை மெஷின் அமைத்து மீண்டும், நெல் கொள்முதல் செய்யும் பணியை துவங்க வேண்டும். அரூரில் செயல்படும் உழவர் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரூரில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். அணை மற்றும் தடுப்பணைகளில் இருந்து பாசனத்திற்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ., செம்மலை, ''விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், குறைதீர் கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.