/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளி பஸ் மீது பட்டாசு; 6 மாணவர்கள் காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு
/
பள்ளி பஸ் மீது பட்டாசு; 6 மாணவர்கள் காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு
பள்ளி பஸ் மீது பட்டாசு; 6 மாணவர்கள் காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு
பள்ளி பஸ் மீது பட்டாசு; 6 மாணவர்கள் காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு
ADDED : ஜூன் 11, 2025 02:23 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அருகே, பள்ளி பஸ் மீது பட்டாசு வீசியதில், 6 மாணவர்கள் காயமடைந்த சம்பவத்தில், கைது செய்ய சென்ற இன்ஸ்பெக்டர் மண்டையும் உடைந்தது. இதனிடையே அங்கு, டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி சாலை மறியலால், பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த ரெட்டிப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் சுவாமி ஊர்வலம் நேற்று மாலை, 4:00 மணிக்கு நடந்தது. அப்போது சிலர், பட்டாசு வெடித்தனர். ரெட்டிப்பட்டியை சேர்ந்த மோகன்தாஸ், 40, தென்னரசு, 30 ஆகியோர் வீசிய பட்டாசு, அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி பஸ் மீது விழுந்து கண்ணாடி உடைந்தது. இதில், பஸ்சில் இருந்த, 6 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆனந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
சம்பவ இடம் வந்த கல்லாவி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் பட்டாசு வீசிய மோகன்தாஸ், தென்னரசு ஆகியோரை கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றினார். பின், காயமடைந்த மாணவர்களை பார்க்க, ஆனந்துார் அரசு சுகாதார நிலையத்திற்கு செல்ல முயன்றபோது அங்கு திரண்ட, 10க்கும் மேற்பட்டோர், இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, மது போதையிலிருந்த ஏ.ரெட்டிப்பட்டியை சேர்ந்த அருண், 27, என்ற வாலிபர் கல்லை வீசியதில் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் தலையில் பட்டு, மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதனிடையே அம்மன் கோவில்பதியில் உள்ள டாஸ்மாக் கடையால், இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நடப்பதாக கூறி, ஆனந்துாரை சேர்ந்த, 15 பெண்கள் உட்பட, 70க்கும் மேற்பட்டோர் அம்மன் கோவில்பதி டாஸ்மாக் கடை முன் நேற்று மாலை, 6:30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம், டி.எஸ்.பி.,க்கள் சீனிவாசன், முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.