/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கூட்டுறவு சர்க்கரை ஆலை பொதுப்பேரவை கூட்டத்துக்கு விவசாயிகளுக்கு அழைப்பிதழ்
/
கூட்டுறவு சர்க்கரை ஆலை பொதுப்பேரவை கூட்டத்துக்கு விவசாயிகளுக்கு அழைப்பிதழ்
கூட்டுறவு சர்க்கரை ஆலை பொதுப்பேரவை கூட்டத்துக்கு விவசாயிகளுக்கு அழைப்பிதழ்
கூட்டுறவு சர்க்கரை ஆலை பொதுப்பேரவை கூட்டத்துக்கு விவசாயிகளுக்கு அழைப்பிதழ்
ADDED : நவ 10, 2025 02:11 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரத்தில், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் வரும், 14ல், 8வது பொதுப்பேரவை கூட்டம் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு விவசாயிகளுக்கு அழைப்பிதழ்களை பீல்டுமேன்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பொதுபேரவை கூட்டத்தில் வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகம் ஏற்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றுவது குறித்து, எதுவும் குறிப்பிடப்படவில்லை என கரும்பு விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: ஆலையில் வரும், 14ல், 8வது பங்குதாரர்கள் பொதுப்பேரவை கூட்டம் நடத்துவது குறித்து, கருத்துக்கேட்பு கூட்டம் கடந்த ஜூலை, 30ல் நடந்தது. ஆலையில், 43,000க்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் உள்ள நிலையில் கருத்து கேட்பு கூட்டம் குறித்து, விவசாயிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்காததால், மிகவும் குறைவான விவசாயிகளே கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், பொதுப்பேரவை கூட்டத்தில் பங்கேற்குமாறு பீல்டுமேன்கள் விவசாயிகளிடம் பொதுபேரவை கூட்டம் குறித்த புத்தகத்துடன் கூடிய அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர். அதில், பொதுப்பேரவை கூட்டத்தில், மாநில அரசின் பரிந்துரை விலையாக, கரும்பு டன் ஒன்றுக்கு, 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிறைவேற்றப்படக்கூடிய, 10 தீர்மானங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, கரும்பு வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகம் ஏற்க வேண்டும். மானிய விலையில் வழங்கப்படும் கரும்பு நாற்றுகள், முன்னோடி விவசாயிகள் என்ற பெயரில் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் நிலையில், அதை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.
ஆலையில் கிடப்பிலுள்ள இணை மின்நிலையம் அமைக்கும் பணியை மீண்டும் துவங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு, ஒரு கிலோ சர்க்கரையை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றுவது குறித்து குறிப்பிடப்படவில்லை. இதனால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

