/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அடிப்படை வசதியின்றி குந்தியம்மன் கோவில்
/
அடிப்படை வசதியின்றி குந்தியம்மன் கோவில்
ADDED : நவ 08, 2024 01:13 AM
அடிப்படை வசதியின்றி குந்தியம்மன் கோவில்
பாலக்கோடு, நவ. 8-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, புலிக்கரை பஞ்., கோவிலுாரிலுள்ள குந்தியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு திங்கள் மற்றும் வெள்ளிகிழமைகளில் சிறப்பு பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை நடக்கின்றன.
ஆயுதபூஜையன்று திருவிழாவும், காணும் பொங்கல் அன்று, கரக திருவிழாவும் நடப்பது வழக்கம். அச்சமயத்தில் இங்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு பக்தர்களுக்கு, அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவறை வசதிகள் இதுவரை அமைக்கப்படவில்லை. மேலும், மின்விளக்குகள் இல்லாததால், இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம், கோவில் வளாகத்தில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
கோவில் அருகே உள்ள பழமையான தெப்பக்குளம் மிகவும் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி, நிறம் மாறி பாசி படர்ந்து, பக்தர்கள் நீராட முடியாத நிலையில் உள்ளது. அதை சீரமைத்து, குளத்தில் புதிதாக நீர் நிரப்பி, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

