UPDATED : நவ 13, 2026 05:38 AM
ADDED : நவ 13, 2026 05:11 AM

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இ-சேவா மைய விழிப்புணர்வு வாகன சேவை நேற்று தொடங்கப்பட்டது. மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவநந்தினி மொபைல் இ-சேவா மைய விழிப்புணர்வு வாகன சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம், அரூர் டவுன், தாசில்தார் அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் சுற்றிவந்து, பொதுமக்களுக்கு நீதித்துறை டிஜிட்டல் சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த மொபைல், இ -சேவா மைய வாகனத்தின் மூலம், பொதுமக்கள் நேரடியாக நீதிமன்றங்களுக்கு செல்லாமல், சிறு வழக்குகள் மற்றும் அபராத வழக்குகளை சுமுகமாக முடித்து கொள்ள முடியும். சாட்சி விசாரணைகளை காணொலி காட்சி மூலம் பதிவு செய்ய முடியும். மின்னணு தாக்கல் மற்றும் வழக்கு விபரங்களை உடனடியாக அறிய முடியும்.இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
