UPDATED : நவ 13, 2026 05:39 AM
ADDED : நவ 13, 2026 05:10 AM

பாப்பிரெட்டிப்பட்டி; கடத்துார் பேரூராட்சி பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பை பேரூராட்சிக்கு சொந்தமான மயானத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வரும் நிலையில், நேற்று மலை போல் கொட்டப்பட்டிருந்த அந்த குப்பைக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும், மூச்சை திணற வைக்கும் வகையில் கரும் புகை பரவியது. இதனால், தர்மபுரி - பொம்மிடி சாலையில் சென்ற
வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
குப்பையில் இருந்து வெளியேறிய புகை மயானத்தை சூழ்ந்ததால், ஈமச்சடங்கு செய்ய வந்த மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டனர். பொது இடங்களில் குப்பையை கொட்டுவதும், அவற்றுக்குத் தீ வைப்பதும் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற செயல்களை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, குப்பைகளை முறையாக அகற்றுவதுடன், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் கண்காணிக்க
பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
