ADDED : நவ 19, 2026 02:08 AM
தர்மபுரி: பாலக்கோடு தாசில்தார் ஜெகதீசன், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு பாலக்கோடு அடுத்துள்ள சந்தன்கொட்டாய் - சந்திராபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த மஹிந்திரா டிராக்டரை நிறுத்தினார்.
அதிலிருந்த டிரைவர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பினார். ஒரு யூனிட் கிராவல் மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்து, புகார்படி, மாரண்டஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அதேபோன்று, பாப்பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராஜேந்திரன், நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு தர்மபுரி - பாப்பாரப்பட்டி நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 3 டன் அளவிற்கு பள்ளிப்பட்டி ஏரியில் மண் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, டிப்பர் லாரியை ஓட்டி வந்த பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மயில்சாமி, 30 என்பவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
மேலும், அரூர் - ஊத்தங்கரை சாலையில், மத்தியம்பட்டி பிரிவு ரோடு அருகே, நேற்று நள்ளிரவு, 12:30 மணிக்கு, அரூர் தாசில்தார் மனோகரன் வாகன தணிக்கை மேற்கொண்டார். அப்போது, சந்தேகப்படும்படி அந்த வழியாக வந்த டிராக்டர் டிரைலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அதில், அனுமதியின்றி மண் ஏற்றி வந்தது தெரிந்தது. டிரைவர் தப்பியோடிய நிலையில் டிராக்டர் மற்றும் டிரைலரை பறிமுதல் செய்து, அரூர் போலீசில் தாசில்தார் மனோகரன் ஒப்படைத்தார். அவர் புகார்படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
