ADDED : நவ 19, 2026 02:03 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், வட்டார இயக்க மேலாண்மை அலுவலர் விஜய லட்சுமி தலைமையில் ரத்த சோகை இல்லாத கிராமமாக மாற்ற, உணவு திருவிழா நடந்தது. நிகழ்ச்சியில், சத்தான உணவு வகைகள், இயற்கை காய்கறிகள், பழங்கள், கீரைகள், சத்து மாவு, பழங்களின் கலவைகள், சிறுதானிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், வட்டார இயக்க மேலாண்மை அலுவலர் விஜயலட்சுமி பேசியதாவது:
பெண்கள், மாணவியர் அதிகளவு ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். ரத்த சோகை இல்லா கிராமங்களை உருவாக்க வேண்டும். ரத்த சோகை என்பது, உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்ல போதிய ஆரோக்கியமான ரத்த சிவப்பணுக்கள் இல்லாததாலும், இரும்புச்சத்து குறைபாடாலும் ஏற்படும் பிரச்னையாகும். இதனால் சோர்வு, பலவீனம், மூச்சுத்திணறல் ஏற்படலாம். மேலும், மாணவியரின் கற்றல் திறன் பாதிப்பதோடு, திருமணத்திற்கு பின் உடல் நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரத்தினவேல், பள்ளி மாணவியர், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
