/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் கோரிக்கை மனு வழங்கல்
/
நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் கோரிக்கை மனு வழங்கல்
ADDED : மார் 06, 2024 06:36 AM
தர்மபுரி: தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில், மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், செயலாளர் இளையபதி மற்றும் நிர்வாகிகள் நேற்று தர்மபுரி வந்திருந்த, தமிழக சட்டசபை பேரவை நுாலகக்குழு தலைவரிடம் மனு அளித்தனர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும், ஊர்ப்புற நுாலகர்களை பதிவுரு எழுத்தராக தரம் உயர்த்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 100 நுாலகங்களுக்கு மேல் உள்ள மாவட்ட நுாலக ஆணை குழுக்களுக்கு கூடுதலாக ஒரு நுாலக ஆய்வாளர் பணியிடம் வழங்க வேண்டும்.
மாவட்டத்திற்கு கூடுதலாக ஒரு இருப்பு சரிபார்ப்பு அலுவலர் பணியிடம் வழங்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு பழைய கட்டடங்களில் செயல்பட்டு வரும் நுாலகங்களுக்கு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும். கிளை மற்றும் ஊர்ப்புற நுாலகங்களை காலத்திற்கேற்ப தரம் உயர்த்த வேண்டும். முழுநேர கிளை நுாலகங்களுக்கு கூடுதலாக ஒரு பணியிடம் உருவாக்க வேண்டும். மாவட்ட மைய நுாலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, பணியாளர்களை நியமிக்கும் வரை, தற்காலிகமாக தினக்கூலிப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

