ADDED : நவ 01, 2025 01:39 AM
ஜலகண்டாபுரம், கோவில்களில் பூட்டை உடைத்து சுவாமி முகம் மற்றும் பீரோவிலிருந்து பணம் ஆகியவற்றை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஜலகண்டாபுரம், தோரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 61, அதே தெருவில் உள்ள சின்னமாரியம்மன் கோவில் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
நேற்று காலை, 5:00 மணிக்கு கோவிலை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 10,500 ரூபாயை காணவில்லை. இதேபோல் ஜலகண்டாபுரம் துர்க்கத்து எல்லை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.சுவாமி முகம் அத்திமரத்தால் செய்யப்பட்டு, பித்தளை தகடு பதித்து வழிபாடு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, 5,000 ரூபாய் மதிப்புள்ள மூன்று சுவாமி முகம் காணாமல் போனது. இது குறித்து கோவில் தர்மகர்த்தா சிவலிங்கம், நேற்று ஜலகண்டாபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேற்கண்ட இருவரின் புகார்படி, ஜலகண்டாபுரம் போலீசார் விசாரணை நடத்தி, திருச்சி துவாக்குடிமலையை சேர்ந்த முருகன், 50, (இவர் மீது திருச்சி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய பகுதியில் திருட்டு வழக்குகள் உள்ளன.), கொங்கணாபுரத்தை சேர்ந்த சண்முக வேல், 32, ஆகிய இருவரை கைது செய்தனர்.

