/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊருக்குள் வராத தனியார் பஸ்சிறைபிடித்த பொதுமக்கள்
/
ஊருக்குள் வராத தனியார் பஸ்சிறைபிடித்த பொதுமக்கள்
ADDED : டிச 22, 2024 01:24 AM
பாலக்கோடு, டிச. 22-
தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து, புலிக்கரை, சோமனஹள்ளி, பாலக்கோடு, வெள்ளிசந்தை, சூடப்பட்டி, பிக்கனஹள்ளி, மல்லுப்பட்டி வழியாக ஓசூருக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், ஊருக்குள் வராமல், அதியமான்கோட்டை -- ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு சில தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். இது குறித்து, பலமுறை பொதுமக்கள் புகார் அளித்து, போராட்டம் நடத்தினர். இதை, தனியார் பஸ் உரிமையாளர்கள் கண்டு கொள்ளாததால், பொதுமக்கள் மற்றும் ஓட்டுனரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.
நேற்று மதியம், தர்மபுரியில் இருந்து பாலக்கோடு வழியாக, ஓசூர் நோக்கி சென்ற தனியார் பஸ் சூடப்பட்டி, பிக்கனஹள்ளி, மல்லுப்பட்டி வழியாக செல்லாமல், வெள்ளிசந்தையில் இருந்து, கொலசனஹள்ளி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் வெள்ளிசந்தை, 4 ரோடு அருகே பஸ்சை சிறை பிடித்து ஓட்டுனர், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மகேந்திரமங்கலம் போலீசார் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ்சை இயக்க, ஓட்டுனரை எச்சரித்து அனுப்பினார்.