/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
/
தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
ADDED : செப் 28, 2024 03:49 AM
தர்மபுரி: 'காவிரி உபரிநீர் திட்டத்தை, இனியும் தாமதப்படுத்துவது நியாயம் இல்லை. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறைதீர்க்கும் கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தர்மபுரி மாவட்ட நீர்நிலைகளில் இருந்து, விவசாய தேவைகளுக்காக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வண்டல் மண் எடுக்க ஆர்வமாக உள்ளனர். ஆனால், வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க அரசு மிகவும் யோசிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, கூட்டுக் குழு அமைத்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.
நடப்பு ஆண்டு தொடக்கத்தில் பெய்த மழையை நம்பி பலரும் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்தனர். ஆனால், அவை பாதி வளர்ந்த நிலையில் வறட்சியால் பயிர்கள் அனைத்து கருகி விட்டது. சிறுதானியப் பயிர்கள் முழுமையாகவே அழிந்து விட்டன. எனவே, தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தர்மபுரி மாவட்ட விவசாயிகளை வறட்சி பாதிப்படைய செய்வதால், ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற, இனியும் தாமதிப்பதில் நியாயம் இல்லை. விரைந்து திட்டத்தை நிறைவேற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
ஈச்சம்பாடி அணை கால்வாயை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். நீர்நிலைகள், மேய்ச்சல் மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில் வளர்ந்து நிற்கும் சீமைக் கருவேலம் உள்ளிட்ட புதர்களை அகற்றிட வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு தலா, 1 ரூபாய் வீதம் வழங்குவதாக அறிவித்த ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை.
இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.
பதிலளித்த பேசிய கலெக்டர் சாந்தி,''பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக, அவ்வப்போது ஏற்படும் பிரச்சினை விரும்பத் தக்கதாக இல்லை. மாவட்டத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பால் உற்பத்தி மூலம், வாழ்வாதாரம் பெறுகின்றனர். எனவே, இந்த பிரச்சினைகளுக்கு ஆவின் நிறுவனம் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். இதர கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசு வழிகாட்டுதல்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.