ADDED : ஆக 23, 2025 01:28 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்துார்-புட்டிரெட்டிப்பட்டி சாலை வழியாக, தாளநத்தம், வேப்பிலைபட்டி, கேத்திரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லுாரி பஸ்கள் செல்கின்றன. ஏராளமானோர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு வரும்போது சாலை, ஒரு வழிபாதையாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழை பெய்யும் போது சாலையோரம் அதிகளவில் பள்ளத்தில் தண்ணீர் தேங்குவதால், பெரிய வாகனங்கள் வரும் போது, பைக் உள்ளிட்ட வாகனங்கள் சாலையோரம் ஒதுங்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள், சாலையை விரிவாக்கம் செய்யவும் சாலையோரம் உள்ள பள்ளங்களுக்கு மண் மற்றும் நொரம்பு கொட்ட கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் நரசிம்மன் உத்தரவின்படி, சாலை ஆய்வாளர் சுதா மேற்பார்வையில், வெங்கடதாரஹள்ளி கல்லாறு பாலம் முதல் புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் வரை, சாலை பணியாளர்கள் சாலையோரம் உள்ள பள்ளங்களுக்கு நொரம்பு, மண் கொட்டி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்