பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களை செயற்கை நுண்ணறிவில் பதிவேற்றம் கூடாது
பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களை செயற்கை நுண்ணறிவில் பதிவேற்றம் கூடாது
ADDED : அக் 16, 2026 03:28 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவி யல் கல்லுாரியில் 'செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.,) மற்றும் அன்றாட அலுவலக நிர்வாகத்தில் அதன் திறம்பட்ட பயன்பாடு' குறித்த அரசு அலுவலர்களுக்கான, 2 நாள் பயிற்சியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் மூலம் கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் தயாரித்தல், தரவுகளை ஆய்வு செய்தல், மொழிபெயர்ப்பு, கூட்டக் குறிப்புகள் எழுதுதல் உள்ளிட்ட அன்றாடப்பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் மிச்சமாகும் நேரத்தை பொதுமக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்தவும், மக்களின் குறைகளுக்குத் துரிதமாகத் தீர்வு காணவும் பயன்படுத்த வேண்டும்.
அதே நேரத்தில், அரசின் ரகசிய தகவல்கள் மற்றும் பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களை செயற்கை நுண்ணறிவு கருவிகளில் பதிவேற்றம் செய்யாமல், தகவல் பாதுகாப்பை உறுதிசெய்து பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். பயிற்சியில் கற்றுக் கொண்டவற்றை தங்களது துறைகளின் அன்றாடப்பணிகளில் செயல்படுத்தி, நிர்வாகத்திறனை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
இந்த கூட்டத்தில், டி.ஆர்.ஓ., மஞ்சுளா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
