/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை
/
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை
ADDED : மே 21, 2024 11:00 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்தது. இந்த ஆண்டு வெப்பத்தின் அளவு வரலாறு காணாத அளவில் இருந்தது.இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட, 22 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை தர்மபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், தொப்பூர், பாலக்கோடு, மாரண்டஹள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் இடி, மின்னல் இன்றி மிதமான பெய்தது. இதில், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழையால், பல இடங்களில், சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதில், வாகனங்கள் தவழ்ந்தவாறு சென்றன.
தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கோட்டப்பட்டி, தீர்த்தமலை, அச்சல்வாடி, வாச்சாத்தி, அனுமன்தீர்த்தம், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்றும், 4வது நாளாக மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், வயல்களில் தண்ணீர் தேங்கியது.
தொடர்மழையால், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, பருத்தி உள்ளிட்டவைகளுக்கு களை எடுத்தல், உரம் இடுதல் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், மக்காச்சோளம், சோளம், மஞ்சள் ஆகியவற்றை மானாவாரியாகவும், இறவை பாசனம் மூலமும், நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

