/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேங்கிய மழை நீரை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது: கலெக்டர்
/
தேங்கிய மழை நீரை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது: கலெக்டர்
தேங்கிய மழை நீரை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது: கலெக்டர்
தேங்கிய மழை நீரை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது: கலெக்டர்
ADDED : அக் 24, 2025 12:51 AM
அரூர், வடகிழக்கு பருவமழையால், நேற்று முன்தினம், தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், ஆண்டியூர், மோட்டூர், நரிப்பள்ளி, தீர்த்தமலை, வீரப்பநாயக்கன்பட்டி, மாம்பாடி, அரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். வயல்களில் தண்ணீர் புகுந்ததால் நெல், மரவள்ளிகிழங்கு, மஞ்சள், வாழை, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரூர் நகராட்சி, 13வது வார்டுக்கு உட்பட்ட, பொன் கற்பகம் திருமணம் மண்டபம் அருகில், குடியிருப்பு பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால், வீடுகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். நேற்று காலை, 11:40 மணிக்கு, அங்கு வந்த கலெக்டர் சதீஸ், தேங்கியுள்ள மழை நீரை பொக்லைன் வாகனம் மூலம் அகற்ற உத்தரவிட்டார்.
பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையால், அரூர் பகுதியில் மூன்று மணி நேரத்திற்கு உள்ளாக, 17.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. குறுகிய காலகட்டத்திற்குள் அதிக மழை பெய்ததால், நிறைய இடங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கி இருந்தது. கலெக்டர், எம்.பி., மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அனைவரும் வந்து அரூர் பகுதியில் முகாமிட்டு, எங்கெல்லாம் மழை நீர் தேங்கியுள்ளதோ அதனை எல்லாம் உடனடியாக அகற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. உயிரிழப்பு, கால்நடைகள் இழப்பு எதுவும் இல்லை. தண்ணீர் மட்டும் ஆங்காங்கே தேங்கியிருப்பதை போர்க்கால அடிப்படையில் இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியை நகராட்சி பணியாளர்களை கொண்டு முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்னும், 3 அல்லது, 4 மணி நேரத்தில் தேங்கியுள்ள தண்ணீர் அனைத்தும் அகற்றப்படும். பின், அந்த இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம், துாய்மை பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். பள்ளிகளுக்கு இன்று, (நேற்று) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் எவ்வளவு மழை வந்தாலும் அதனை நாம் சமாளிக்க கூடிய அளவிற்கு திட்டங்கள் அனைத்தும், தமிழக அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. 200 ஹெக்டேர் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் படிப்படியாக வடிந்து வருகிறது. 2 அல்லது, 3 நாட்களுக்கு மேலாக தண்ணீர் இருந்தால், பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பொதுமக்கள் குமுறல்
கலெக்டர் சதீஸ்யிடம், 13வது வார்டு மக்கள், கடந்த, 20 ஆண்டுகளாக இப்பிரச்னை உள்ளதாகவும், அமைச்சர்கள் முதல், அதிகாரிகள் வரை பலமுறை பார்வையிட்டு போட்டோவிற்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு செல்வதாகவும், யாரும் பிரச்னையை தீர்க்கவில்லை என குமுறலுடன் கூறினர்.
ஆய்வின் போது, தர்மபுரி தி.மு.க.,-எம்.பி., மணி, அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை, நகராட்சி துணைத் தலைவர் தனபால், கமிஷனர் ஹேமலதா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து, கலெக்டர் சதீஸ் மாம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

