/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் கோவிலில் 54 ஆண்டுக்கு பின் வைகாசி விசாக தெப்ப திருவிழா விமரிசை
/
திண்டுக்கல் கோவிலில் 54 ஆண்டுக்கு பின் வைகாசி விசாக தெப்ப திருவிழா விமரிசை
திண்டுக்கல் கோவிலில் 54 ஆண்டுக்கு பின் வைகாசி விசாக தெப்ப திருவிழா விமரிசை
திண்டுக்கல் கோவிலில் 54 ஆண்டுக்கு பின் வைகாசி விசாக தெப்ப திருவிழா விமரிசை
ADDED : மே 24, 2024 03:54 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி உடனுறை பத்மகிரீஸ்வரர் -- ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி மலையடிவாரம் கோட்டைகுளத்தில், 54 ஆண்டுகளுக்கு பின் நடந்த தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பொதுவாக சிவாலயங்களில் ஒரு சிவன், ஒரு பார்வதி சிலை இருக்கும். ஆனால் திண்டுக்கல் அபிராமி உடனுறை பத்மகிரீஸ்வரர் - ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் 2 சிவன், 2 பார்வதி சிலைகள் உள்ளன.
திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டை மீது உள்ள கோவிலில் இருந்த அபிராமி அம்மன்,- பத்ம கிரீசுவரர் சிலைகள் அகற்றப்பட்டதால், இந்த சிலைகள், அபிராமி உடனுறை பத்மகிரீஸ்வரர் - ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதையடுத்து, அங்கு இரு சிவன், பார்வதி சிலைகள் உள்ளன.
காலப்போக்கில் இந்த கோவில் அபிராமி அம்மன் கோவில் என்ற பெயருடன் இன்று வரை நிலைத்து நிற்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இதன் பின், அன்னியர் படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் தெப்பத்திருவிழா தடைபட்டுள்ளது.
இதற்கிடையே 1970ல் அன்றைய கோவில் அறங்காவலர்கள், மீண்டும் தெப்பத் திருவிழா நடத்தினர். அதன் பின், நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்தாண்டு தெப்பத்திருவிழா நடத்த கோவில் அறங்காவலர்கள் குழு முடிவு செய்து, அதற்கான ஒப்புதலை, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பெற்றனர்.
அதன்படி, வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டைக்குளத்தில், 54 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் இரவு தெப்பத்திருவிழா நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மன் வீற்றிருக்க, குளத்தின் இருபுறமும் பக்தர்கள் நின்று, வடம் பிடித்து இழுத்தனர்.
திண்டுக்கல் சுற்று கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தெப்பத்திருவிழா துவங்கியது முதல், மழை பெய்ததால், பக்தர்கள் மழையில் நனைந்த படி தரிசனம் செய்தனர்.