/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிற்றாற்று ஓடையை மறைத்து நிற்கும் கருவேலம்
/
சிற்றாற்று ஓடையை மறைத்து நிற்கும் கருவேலம்
ADDED : ஆக 31, 2024 05:50 AM

வேடசந்துார்: வேடசந்துார் அருகே குடகனாற்றில் கலக்கும் சிற்றாற்று ஓடையில் அடர்ந்து காணப்படும் கருவேல முட்களை அகற்றி துார்வார வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வேடசந்துார் திண்டுக்கல் ரோட்டில் விவசாயிகள் சங்க கட்டடம் அருகே குடகனாற்றில் கலப்பது தான் சிற்றாற்று ஓடை. இந்த ஓடையானது பெருமாள் கவுண்டன்பட்டி, அச்சா கவுண்டனுார், லவுகணம்பட்டி, நாகம்பட்டி வழியாக சென்று விவசாயிகள் சங்க கட்டடம் அருகே குடகனாறு ஆற்றில் கலக்கிறது.
6 கி. மீ., துாரம் உள்ள இந்த சிற்றாற்று ஓடை முழுவதும் கருவேல முட்களால் மூடி கிடக்கிறது, ஆடு மாடுகள் மட்டுமின்றி மனிதர்கள் கூட ஆற்றுப் பகுதியை கடந்து செல்ல முடியாது. வழி நெடுகிலும் கழிவுநீர் தேங்கி முட்புதர்கள் நிறைந்து கிடப்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் தான் அதிகரித்துள்ளது. 2005-ல் கூடுதல் மழை பெய்து கூடுதலான நீர், சிற்றாற்று ஓடையில் பெருக்கெடுத்த போது, இந்த ஓடையில் தேங்கி நின்ற முட்களால் தண்ணீர் வெளியேற வழி இன்றி நகர் பகுதிகளுக்குள் புகுந்தது . விரைவில் மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் இந்த ஓடையில் உள்ள கருவேல முட்களை முற்றிலுமாக அகற்றி முறையாக துார்வாரி ஓடையை சுத்தமாக வைத்திருக்க நாகம்பட்டி ஊராட்சி நிர்வாகம், வேடசந்துார் பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
சுத்தம் செய்யுங்க
ஆர்.எம். நடராஜன், தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்கம், இளைஞர் அணி தலைவர், வேடசந்துார்: சிற்றாற்று ஓடைப்பகுதி முழுவதுமே கருவேலம் முட்களால் மூடிக்கிடக்கிறது. வழி நெடுக முட்கள் நிறைந்து காணப்படுவதால் வரும் மாதங்களில் நல்ல மழை பெய்து ஓடையில் தண்ணீரே வந்தாலும் செல்ல முடியாத நிலை உள்ளது. ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் ஓடைப்பகுதியை முழுவதுமாக சுத்தம் செய்வதுடன் நகர் பகுதிக்குள் உள்ள குடகனாற்று பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டும்.
ஊருக்குள் புகுந்த நீர்
வி.கோபால், ஒன்றிய தலைவர், வேடசந்துார்: சிற்றாற்று ஓடையில் கருவேல முட்கள் நிறைந்து காணப்படுவதுடன் வழி நெடுகிலும் ஓடையின் ஓரப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகள்,குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. கழிவு நீர் தேங்கி கண்ணுக்கெட்டிய துாரம் வரை முட்புதர்களின் காடாக காட்சியளிக்கிறது. 2006 ல் ஓடையில் கருவேல முட்கள் மூடி கிடந்ததால் கூடுதலான மழைநீர் வந்தபோது பாலத்தின் கண்ணார் பகுதிகளை முட்கள் மூடிக்கொண்டது. இதனால் தண்ணீர் செல்ல முறையான வழியின்றி நகர் பகுதிகளுக்குள் சென்று விட்டது.
பாம்பு,பல்லிகளின் புகலிடம்
இல. சக்திவேல், சமூக ஆர்வலர், வேடசந்துார்: சிற்றாற்று ஓடையில் வழி நெடுகிலும் கருவேல முட்கள் நன்கு வளர்ந்து மூடிக்கிடக்கின்றன.
இதனால் இந்த ஓடை முட்புதராக காட்சியளிக்கிறது. நகர் பகுதிக்குள் உள்ள இந்த ஓடை, ஆற்றுப்பகுதியை முறையாக துார் வராததால் பாம்பு பல்லிகளின் புகலிடமாக உள்ளது. மக்கள் நாகரீக காலத்திற்கு மாறிவந்த நிலையில், இன்னும் முட்புதர்களில் பூச்சி புழுக்களுடன் போராடிக் கொண்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. முட்புதர்களை அகற்றி ஓடையை செம்மைப்படுத்த வேண்டும் என்றார்.