/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கையாடல் விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் ரவிச்சந்திரன் தகவல்
/
கையாடல் விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் ரவிச்சந்திரன் தகவல்
கையாடல் விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் ரவிச்சந்திரன் தகவல்
கையாடல் விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் ரவிச்சந்திரன் தகவல்
ADDED : ஆக 01, 2024 05:28 AM
திண்டுக்கல்: ''மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளதோ அவர்கள் யாராக இருந்தாலும் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்''என திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் பேசினார்.
திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் இளமதி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை மேயர் (தி.மு.க.,) ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன், பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் விவாதம்
தனபால்,(பா.ஜ.,): புதிய பஸ் ஸ்டாண்ட் எந்த இடத்தில் அமைக்கப்பட உள்ளது. நாய்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் உள்ளதால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. அவைகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி மட்டும் செலுத்துகிறீர்கள். கருத்தடை செய்யாமல் இருப்பது ஏன்.
கமிஷனர்: புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப் படும்.6000 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிபோடும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் கருத்தடை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.
ஆனந்த் (தி.மு.க.,): திண்டுக்கல் நகரில் பாதாள சாக்கடை பெரும் பிரச்னையாக உள்ளது. ரோடுகள் எங்கு பார்த்தாலும் சேதமாக கிடக்கிறது.
கமிஷனர்: ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மெதுவாக நடக்கும் பணிகளை விரைவில் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
கணேசன் (மார்க்சிஸ்ட்): பாதாள சாக்கடையை துார்வார வேண்டும் என பல முறை அதிகாரிகளிடம் புகாரளித்து விட்டேன். யாரும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். ஆர்.எம்.காலனி சுற்றிய பகுதிகளில் நாய்கள் அதிகளவில் உள்ளது. இரவு நேரத்தில் மக்கள் நடமாட முடியவில்லை.
தனபால் (பா.ஜ.,): மக்கள் வரிப்பணத்தை சரவணன் மட்டும் தான் கையாடல் செய்தாரா மற்ற அலுவர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும். எனது வார்டில் பாதாள சாக்கடை பிரச்னை தீராத பிரச்னையாக உள்ளது. வார்டு மக்கள் அல்லல்படுகின்றனர். அதிகாரிகள் வருகிறார்கள்,பார்வையிடுகிறார்களே தவிர எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
பொறியாளர்: பாதாள சாக்கடைகள் முறையாக துார்வாரப்பட்டு தான் வருகிறது. கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேயர்: 14 வார்டில் கவுன்சிலர் கூறிய அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதுவும் செய்யவில்லை என கூறுவது நியாமல்ல. மீண்டும் 14 வார்டு முழுவதும் ஆய்வு செய்து அங்கிருக்கும் பிரச்னைகளை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஸ்கரன் (அ.தி.மு.க.,): எனது வார்டில் எந்த பணிகளும் நடக்கவில்லை. என் வார்டை மட்டும் புறக்கணிக்கிறார்கள். நல்ல ரோடுகளை பெயர்த்து மீண்டும் ரோடு போடுகின்றனர். தண்ணீர் இல்லாமல் பொது மக்கள் தவிக்கின்றனர். பொது கழிப்ப்பறை பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கிறது. நானும் பல முறை மனு கொடுத்து விட்டேன். நடவடிக்கை இல்லை.
துணை மேயர்: வாய்க்கு வருவதையெல்லாம் பேசக்கூடாது. பணிகள் நடக்கவில்லை என்று புகார் கூறுகிறீர்கள். அதுமட்டும் தான் செய்கிறீர்கள். அதை சரி செய்ய யாராவது ஒரு அதிகாரிகளை சந்தித்து கூறுகிறீர்களா இல்லை. பிரச்னைகள் எப்படி சரியாகும். தரமற்ற பணிகள் நடக்கிறது தெரிந்தால் உடனே பணியை நிறுத்த வேண்டியது தானே. இப்போது வந்து பேசுகிறீர்கள்.
ஜோதிபாசு (மார்க்சிஸ்ட்: மக்கள் வரிப்பணம் கையாடல் செய்திருப்பது பெரிய தவறு. இதை ஏன் கமிஷனர் கண்காணிக்க தவறுனீர்கள். இத்தனை மாதமாக அதை கவனிக்காமல் அலுவலர்கள் என்ன செய்தார்கள். தணிக்கை பிரிவு அலுவலர்களும் பொறுப்பில்லாமல் இருந்துள்ளார்கள். இது கண்டிக்க தக்கது.
கமிஷனர்: மக்கள் வரிப்பணம் கையாடல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர். கையாடல் விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதோ அவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.