/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் தினமும் நெரிசல்
/
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் தினமும் நெரிசல்
ADDED : மே 21, 2024 06:40 AM

பழநி : பழநி நகரின் முக்கிய சாலைகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பழநி நகரில் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதாலும் ஆக்கிரமிப்பு கடைகளாலும் பொதுமக்கள் தினமும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆர்.ஏப்.,ரோடு, ஸ்டேட் பேங்க் ரோடு, காந்தி மார்க்கெட் ரோடு, ராஜாஜி ரோடு, நேதாஜி ரோடு, அய்யம்பள்ளி ரோடு, சன்னிதி வீதி, பூங்கா ரோடு, இட்டேரி வீதி, திருவள்ளுவர் சாலை, கான்வென்ட் ரோடு, ரெட் கிராஸ் ரோடு முக்கிய சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பெரும்பாலும் முக்கிய சாலைகளில் வியாபாரிகள் பிளாட்பாரத்தில் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு ஏற்படுத்துகின்றனர். பள்ளி அலுவலகம் செல்வோர் பாதிக்கின்றனர். அடிவாரம் பகுதியில் உள்ள அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, சன்னிதி வீதி, கிரிவீதி, பூங்கா ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளாலும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
வாகன நெரிசல் அதிக அளவில் ஏற்படுவதால் நகரின் முக்கிய சாலையான குளத்து ரோடு ,திண்டுக்கல் சாலை, புது தாராபுரம் சாலை ஆகியவற்றில் வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது . காந்தி மார்க்கெட் ரோடு, கிரி வீதி, திருவள்ளுவர் சாலை பகுதிகளில் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஸ்டேட் பேங்க் ரோடு ஆர்.எப்., ரோடு பகுதியில் உள்ள வணிக வளாகங்கள்,வங்கிகளில் பார்க்கிங் வசதிகள் இல்லாததால் வாகனங்களை சாலையிலே நிறுத்தி செல்கின்றனர் இதனால் சாலைகளில் இடையூறு ஏற்படுகிறது.
வாகனங்களுக்கு இடையூறு
காளியப்பன், முன்னாள் ராணுவ வீரர், டி .கே.என்., புதுார், பழநி : பழநி நகர், ஆர்.எப்., ரோடு பகுதியில் பிளாட் பாரத்தை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் பிளாட்பாரத்தில் நடக்க முடியாமல் ரோட்டில் நடக்கும் சூழல் ஏற்படுகிறது. ரோட்டில் இருபுறமும் டூவீலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது . இதனால் போக்குவரத்து நெரிசலுடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கு இடையே வாக்குவாதமும் நடைபெறுகிறது.
ஓட்டிகளுக்கு சிரமம்
மதன் குமார், தொழில் முனைவோர், வி.கே.மில்ஸ் : காந்தி மார்க்கெட் பகுதியில் புதிய கட்டட பணிகள் நடைபெறுகிறது. இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதையும் தாண்டி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. பார்க்கிங் முறைப்படி இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. முறையாக பார்க்கிங் செய்ய வழிமுறையை அறிவுறுத்தவேண்டும்.
தீர்வு: பழநி நகர பகுதிகளில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு செய்யும் சாலையோர கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதோடு தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும். போக்குவரத்து போலீசாரும் சாலைகளில் கடை வைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி அதிகாரிகளும் பாரபட்சம் இன்றி நடக்கும் நிலையில் பழநி சாலைகளில் போக்குவரத்து இடையூறுக்கும் வழி பிறக்கும்.

