/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எங்கும் நாய்கள்...சேதமடைந்த ரோடுகள்... புலம்பலில் சுண்ணாம்பு காளவாசல் நகர் குடியிருப்போர்
/
எங்கும் நாய்கள்...சேதமடைந்த ரோடுகள்... புலம்பலில் சுண்ணாம்பு காளவாசல் நகர் குடியிருப்போர்
எங்கும் நாய்கள்...சேதமடைந்த ரோடுகள்... புலம்பலில் சுண்ணாம்பு காளவாசல் நகர் குடியிருப்போர்
எங்கும் நாய்கள்...சேதமடைந்த ரோடுகள்... புலம்பலில் சுண்ணாம்பு காளவாசல் நகர் குடியிருப்போர்
ADDED : ஜூன் 27, 2024 05:44 AM

திண்டுக்கல் : சாக்கடை அடைப்பால் கழிவு நீர் தேக்கம், ஒழுங்கற்ற குடிநீர் சப்ளை, சேதமடைந்த ரோடுகள், சேதமான மின்கம்பங்கள், தாழ்வான ஒயர்கள், சமூக விரோதிகள் நடமாட்டம், தெருநாய்கள் தொல்லை என அடுக்கடுக்கான பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் சுண்ணாம்பு காளவாசல் நகர் குடியிருப்போர்.
திண்டுக்கல் சுண்ணாம்பு காளவசல் நகர் குடியிருப்போர் பாதுகாப்பு சங்க தலைவர் ராஜூ, செயலாளர் ஹைருல்லா, துணைச் செயலாளர் அப்பாஸ், பொருளாளர் ஆசிக் உசேன், நிர்வாக குழு உறுப்பினர்கள் கிரிஜா, ஜெயபாரதி கூறியதாவது: வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் சப்ளை முறையற்றதாக இருக்கிறது. ஒரே மாதிரியாக சப்ளை செய்யப்படுவதில்லை. காலையில் பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்வோர் என பலர் உள்ள நிலையில் குடிநீர் சப்ளை ஒரே மாதிரியாக இல்லாததாலும் சிரமமாக உள்ளது. குறுக்கு தெரு, சந்து பகுதிகளில் உள்ள ரோடுகள் சேதமடைந்து காட்டு வழிப்பாதை போல் மேடு, பள்ளமாக உள்ளது. வாகனங்கள் சென்று வரவே சிரமத்திற்கு உள்ளாகின்றன. வாகனங்கள் பழுதாகிறது.குறுகலான பாதைகளில் கார்களை பார்க்கிங் செய்து பாதையை மறைப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.சமூக விரோத செயல்கள்
மின்கம்ப ஒயர்கள் தாழ்வாக உள்ளதால் காற்று பலமாக வீசினாலும் குறைந்த அழுத்த மின்சாரம் உருவாகி மின் உபகரணங்களில் பழுது ஏற்படுகிறது. பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது குடியிருப்பாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. டிரான்பார்மர் பாதுகாப்பற்ற முறையில் ரோட்டையொட்டி இருக்கிறது. தண்ணீர் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. சமூக விரோத செயல்கள் அதிகம் உள்ளதால் போலீசார் தினமும் இரவில் ரோந்து வர வேண்டும். குறிப்பாக தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. 5 தெருக்களிலும் 50 க்கு மேல் நாய்கள் திரிகின்றன. குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் அவதிப்படும் சூழல் நிலவுகிறது. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடைகள் துார் வாராமல் உள்ளதால் தேங்கிய கழிவுநீரின் மூலமாக கொசு உற்பத்தியாகிறது. நோய்தொற்று சூழல் நிலவுகிறது என்றனர்.