/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் கண்டெடுக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி ஆவணம்
/
பழநியில் கண்டெடுக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி ஆவணம்
பழநியில் கண்டெடுக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி ஆவணம்
பழநியில் கண்டெடுக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி ஆவணம்
ADDED : ஆக 29, 2024 09:28 PM

பழநி:பழநியில் 19ம் நுாற்றாண்டு கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரைத்தாள் ஆவணம் கண்டறியப்பட்டதாக, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறினார்.
அவர் கூறியதாவது:
பழநி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மீனா என்பவர், பாதுகாத்து வைத்திருந்த பழங்கால ஆவணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு வேண்டினார். அதை ஆய்வு செய்தபோது, அது கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரைத் தாள் என்பதும், பாலசமுத்திரம் ஜமீன்தாரிணி சின்னோபளம்மா எழுதியதும் தெரிந்தது.
இந்த முத்திரைத்தாள் 10.5 செ.மீ., அகலம், 16.5 செ.மீ., உயரம் உள்ளது. பாலசமுத்திரம் ஜமீன்தாரினி சின்னோபளம்மா சொற்படி எழுதப்பட்டு, இறுதியில் கையொப்பம் இடப்பட்டுள்ளது. 31 வரிகளில் ஆவணம் எழுதப்பட்டுள்ளது.
தனது ஜமீன் பண்ணையின், 23 ஏஜன்ட்கள் பெயர்களை எழுதி, அதை மேனேஜர்களின் விபரப் பத்திரம் என்று, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரைத் தாளில் பதிந்து வைத்திருக்கிறார்.
இந்த விபரப் பத்திரம் ஈஸ்வர ஆண்டு, மாசி 9ம் தேதி என எழுதப்பட்டுள்ளது. இது, 1818 பிப்., 21ம் தேதி.
கடினமான தாளில் இந்தப் பத்திரம் உள்ளது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வட்டவடிவமான கட்டண முத்திரை, பத்திரத்தாளின் இடது மேல் புறம், 'இன்டாக்ளியோ' எனப்படும் அச்சு முறையில், இரண்டணா என தமிழ், ஆங்கிலம், உருது மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.
அன்றைய காலத்தில் பத்திரப்பதிவுகள், கிழக்கிந்தியக் கம்பெனியின் கருவூலம் மூலம் நடைபெற்றன என்பது, இந்த பத்திரத்தின் மூலம் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

