/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா
/
பழநி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா
ADDED : ஆக 28, 2024 05:54 AM

பழநி, : பழநியில் நடந்த விவசாய குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ., சரவணன் தலைமையில் நடைபெற்றது. பெரியம்மாபட்டி, இரவிமங்கலம், ஆண்டிபட்டி பகுதிகளில் உபரி நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ளது.
அதில் உள்ள விபரங்கள் பட்டா பெறுவதிலும், கம்ப்யூட்டர் பட்டா பெறுவதிலும் குளறுபடிகள் உள்ளன. இதுகுறித்து அதிகாரிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறுகின்றனர்.
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். தாசில்தார் சக்திவேலன் பேச்சு வார்த்தை தொடர்ந்து குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் விவாதம் :
காளிதாஸ், பெரியம்மாபட்டி: உபரிநிலம் குறித்து விபரங்கள் முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.டி.ஓ.,: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டும் ஒரு பிரச்னைக்கு தீர்வாகாது. உபரி நிலங்கள் குறித்து அனுபவித்து இடத்தின் அளவும் பட்டாவின் அளவும் வேறுபட்டு உள்ளது. இதுகுறித்த குளறுபடிகள் களையப்படும்.
காளிதாஸ், பெரியம்மாபட்டி: உபரி நிலங்கள் குறித்த நடவடிக்கைக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம்.
ஆர்.டி.ஓ.,: கடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிற மனுக்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலரகுபதி, போடுவார் பட்டி: மேலக்கோட்டை பகுதியில் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளது.
ஆர்.டி.ஓ.,: பாதை குறித்து சர்வே செய்ய அதிகாரிகள்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரகுபதி, போடுவார் பட்டி: மைவாடியில் இருந்து அமைக்கப்படும் மின் வழித்தடத்திற்கு நில உரிமையாளர்களிடம் முறையாக அனுமதி பெறாமல், இழப்பீடு வழங்காமல், விவசாய நிலங்களில் மின் டவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதனால் விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.
ஆர்.டி.ஓ., : தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.