திண்டுக்கல் : கோடை வெயிலால் தீப்பற்றி எரிவதாக திண்டுக்கல் தீயணைப்பு அலுவலகத்திற்கு தினமும் 15க்கு மேலான அழைப்புகள் வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. ரோட்டோரங்களில் குப்பை,புற்கள் தீப்பற்றி எரியும் நிலை உள்ளது. இவ்வழித்தடங்களில் புகைபிடித்து செல்லும் நபர்கள் சிகரெட்,பீடி துண்டுகளை அணைக்காமல் அப்படியே விட்டு செல்கின்றனர். இது காய்ந்த நிலை புற்கள்,குப்பையில் பற்றி எரிகிறது. ரோடெங்கும் கரும்புகை பரவ வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர். இத்தீயானது காற்றில் அருகிலிருக்கும் வீடுகளிலும் பரவ விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இதை பார்க்கும் மக்கள் உடனே தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கின்றனர். அதன்படி வீரர்களும் தீயை அணைக்கின்றனர். சில நேரங்களில் வீரர்கள் வருவதற்கு முன் தானாக அணைந்து விடுகிறது. அந்த வகையில் தீ எரிவது தொடர்பாக தினமும் 15க்கு மேலான அழைப்புகள் வருகின்றன. புகை பிடிப்பவர்கள் சிகரெட், பீடியை பயன்படுத்தி விட்டு ரோட்டோரங்களில் நெருப்புடன் வீசுவதை தவிர்க்க வேண்டும்.

