/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடு அமைத்து 15 ஆண்டுகளாச்சு... மக்களை விழி பிதுங்க செய்யும் அவலம்
/
ரோடு அமைத்து 15 ஆண்டுகளாச்சு... மக்களை விழி பிதுங்க செய்யும் அவலம்
ரோடு அமைத்து 15 ஆண்டுகளாச்சு... மக்களை விழி பிதுங்க செய்யும் அவலம்
ரோடு அமைத்து 15 ஆண்டுகளாச்சு... மக்களை விழி பிதுங்க செய்யும் அவலம்
ADDED : ஜூன் 11, 2024 11:44 PM

வேடசந்துார் : காசிபாளையத்திலிருந்து வெள்ளையம்பட்டி வழியாக செல்லும் தார் ரோடு அமைத்து 15 ஆண்டுகளான நிலையில் தற்போது படு மோசமாக சேதம் அடைந்துள்ளதால் பள்ளி கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி நுாற் பாலை தொழிலாளர்கள், பொதுமக்கள் படு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
வேடசந்துார் கரூர் நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கு நோக்கி ஒரு கி.மீ., துாரத்தில் காசிபாளையம் உள்ளது. காசிபாளையத்திலிருந்து மட்டப்பாறை சுவாமி கோயில் வழியாக வெள்ளையம் பட்டி, எல்லைப்பட்டி காலனி வரை 4 கிலோமீட்டர் துாரத்திற்கு தார் ரோடு செல்கிறது. இந்த ரோடு வழி நெடுகிலும் கற்கள் பெயர்ந்து பள்ளமாக உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்கள் கவனமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. போதிய வெளிச்சம் இல்லாத காட்டுப்பகுதியில் செல்லும் இந்த ரோடு இரண்டு மூன்று இடங்களில் மிக வளைவாக உள்ள நிலையில் மிக மோசமாக சேதம் அடைந்துள்ளதால், டூவீலர்களில் வரவே மக்கள் அச்சப்படுகின்றனர்.
காசிபாளையம், வெள்ளையம்பட்டி, எல்லைப்பட்டி காலனி, எல்லைப்பட்டி, நடுப்பட்டி வழியாக கூம்பூர் வரை செல்லும் இந்த ரோடு குறுக்கு வழியாக செல்வதால் எந்த நேரமும் போக்குவரத்து கூடுதலாக உள்ளது. வேடசந்துார் நகர் பகுதிக்கு வரவேண்டிய பள்ளி கல்லுாரி மாணவர்கள் ,வேலைக்கு செல்வோர்,நுாற்பாலை வாகனங்கள் மட்டுமின்றி அரசு டவுன் பஸ் ஒன்றும் சென்று வருகிறது. இவ்வளவு போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு கவனிப்பார் இன்றி கிடப்பதால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகிகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த ரோட்டை மீண்டும் ஒரு முறை புதுப்பித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது.
கற்கள் பெயர்ந்துள்ளது
கே.காசிநாதன், சி.பி.ஆர்., சோசியல் டிரஸ்ட், காசிபாளையம்: காசிபாளையம், வெள்ளையம்பட்டி, எல்லைப்பட்டி காலனி வரை உள்ள இந்த ரோடு கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே பயனற்றுள்ளது. இந்த ரோட்டில் காசிபாளையம் மேல்நிலைப்பள்ளி செல்லும் மாணவர்கள், சைக்கிளில் சென்று வர சிரமப்படுகின்றனர். இதேபோல் நுாற்பாலை வேலைகளுக்கு செல்வோரும், வாகன ஓட்டிகளும் வெகுவாக பாதிக்கின்றனர். கூம்பூர், நடுப்பட்டி, எல்லைப்பட்டி பகுதியில் இருந்து வேடசந்துார் செல்லும் மக்களுக்கான குறுக்கு வழி இது என்பதால் கூடுதலான போக்குவரத்து உள்ளது. குறிப்பாக கூம்பூர் குடகனாறு ஆற்றில் பாலம் கட்டியதால் வேடசந்தூர் செல்லும் மக்கள் இந்த ரோட்டைத்தான் பயன்படுத்துகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டை விரைந்து புதுப்பிக்க வேண்டும்.
பலரும் சுற்றி செல்கின்றனர்
கே.ஜெயவேல், விவசாயி, காசிபாளையம்: விவசாய நிலங்களில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் டூவீலர்களில் வேடசந்தூர் நகர் பகுதிக்கு கொண்டு செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இந்த ரோடு நல்ல முறையில் இருந்தபோது கூடுதலான வாகனங்கள் சென்று வந்தன. தற்போது சேதம் அடைந்ததால் இந்த வழித்தடத்தை மறந்து பலர் சுற்றி செல்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நன்றாக உள்ள ரோட்டையே மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் இது போன்ற சிதிலமடைந்த ரோடுகளை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இப்பகுதி மக்கள் நலன் கருதி ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.
ஒற்றை கோரிக்கையாக...
ஏ.சரவணன், எர்த் மூவர்ஸ், காசிபாளையம்: காசிபாளையம், வெள்ளையம்பட்டி, எல்லைப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் டூவீலரில்தான் நகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதே போல், வேடசந்தூர் மற்றும் கூம்பூர் பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். இந்த ரோட்டில் டூவீலர்களை எப்படி ஓட்ட முடியும் என்பதை அதிகாரிகளே ஒரு முறை சென்று பார்க்கட்டும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி ரோடு எது பள்ளம் எது என தெரியாத நிலையில்தான் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதே வழித்தடத்தில் அரசு பஸ் போக்குவரத்தும் உள்ளது. இந்தப் பகுதி மக்களின் ஒற்றை கோரிக்கையே ரோட்டை மாவட்ட நிர்வாகம் விரைந்து புதுப்பித்து தர வேண்டும் என்பதுதான்.