/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரம் வெட்டும் ஏலத்தால் வருவாய் இழப்பு; ஊராட்சி உறுப்பினர்கள் புகார்
/
மரம் வெட்டும் ஏலத்தால் வருவாய் இழப்பு; ஊராட்சி உறுப்பினர்கள் புகார்
மரம் வெட்டும் ஏலத்தால் வருவாய் இழப்பு; ஊராட்சி உறுப்பினர்கள் புகார்
மரம் வெட்டும் ஏலத்தால் வருவாய் இழப்பு; ஊராட்சி உறுப்பினர்கள் புகார்
ADDED : செப் 18, 2024 04:15 AM

கொடைக்கானல், : கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் குங்கிலியம் மரங்கள் அகற்றும் ஏலத்தால் ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஊராட்சி உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வில்பட்டி ஊராட்சி அட்டுவம்பட்டி கிரஸ் ,அன்னை சத்யா காலனியில் மின் பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற கோரிக்கை எழுந்த நிலையில் அட்டுவம்பட்டி கிரஸ்சில் 25 , அன்னை சத்யா காலனியில் 30 என 55 மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
ஊராட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி ஏலம் அறிவிப்பு செய்ய அவசரகதியில் உறுப்பினர்கள் இல்லாமல் ஊராட்சிக்கூட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்று ஏல விடும் தேதி ஒரு மாத இடைவெளியில் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் உறுப்பினர்கள் கோரிக்கையை நிராகரித்து ஆக.1 ல் கூடுதல் தொகைக்கு ஏலம் விடப்பட்டதாக ஊராட்சி மூலம் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு தகவல் ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ., ஒன்றிய அலுவலகங்களில் ஒட்டப்பட்டன.
இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் , ரூ. பல லட்சம் மதிப்புள்ள மரம் குறைவான தொகைக்கு ஏலம் விடப்பட்டதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
இதோடு 55 மரங்களுக்கு அனுமதி பெற்று 200க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதாக கலெக்டருக்கு புகார் அனுப்பினர். இதோடு இதன் முறைகேடுகளை ஆய்வு செய்து ஊராட்சிக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரி செய்ய வேண்டுமென உறுப்பினர்கள் கோரி வருகின்றனர்.
கொடைக்கானல் பி.டி. ஒ.,பிரபாகரன் கூறுகையில்,'' வனத்துறை மூலம் மரங்கள் மதிப்பீடு செய்து அதற்கான தொகை கணக்கீடு செய்யப்பட்டு ஏலத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலம் அறிவிப்பு தொடர்பாக பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடக்கவில்லை. ஊராட்சி உறுப்பினர்கள் இது சம்பந்தமான புகாரை தன்னிடம் தெரிவிக்கவில்லை'' என்றார்.
வில்பட்டி ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி கூறுகையில்,'' 55 மரங்கள் வெட்டுவதற்கான ஏலம் அறிவிப்பு முறையாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட தொகையை காட்டிலும் கூடுதலாக ஏலம் கேட்டவருக்கு ஏலம் விடுக்கப்பட்டது. வருவாய் இழப்பு சம்பந்தமான எவ்வித முறைகேடும் நடக்கவில்லை''என்றார்.