/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வணிக வளாக கடைகள் வாடகை செலுத்த முடியாது மூடல்
/
வணிக வளாக கடைகள் வாடகை செலுத்த முடியாது மூடல்
ADDED : ஜூலை 04, 2024 02:17 AM

குஜிலியம்பாறை: பாளையத்தில் உள்ள 28 வணிக வளாகக் கடைகளை பொது ஏலத்தில் கூடுதல் வாடகைக்கு எடுத்த நிலையில் வாடகையை செலுத்த முடியாத ஏழு பேர் கடைகளை மூடியுள்ளனர். இதனால் மீண்டும் முறையான தொகைக்கு ஏலம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
பாளையம் பேரூராட்சி பாளையத்தில் திண்டுக்கல் கரூர் ரோடு, பாளையம் திருச்சி ரோட்டில் பேரூராட்சிக்கு சொந்தமான 28 கடைகள் உள்ளன. வேடசந்துார் எம்.எல்.ஏ., வாக கிருஷ்ணன் இருந்த போது அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இக்கட்டடங்கள் கட்டப்பட்டது. இதுவரை குறைந்த வாடகைக்கு விடப்பட்ட நிலையில் ஏப்ரல் 24 ல் டெண்டர் நடந்தது. ஒவ்வொரு கடையும் குறைந்தது மாதம் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.52 ஆயிரம் வரை வாடகைக்கு சென்றது. ரூ.ஒரு லட்சம் டெபாசிட் செலுத்தி கூடுதல் மாத வாடகைக்கு எடுத்து வாடகை முறையாக செலுத்த முடியாமல் விட்டதால் 8 கடைகள் மூடப்பட்டுள்ளன. பேரூராட்சிக்கு வருமான இழப்பு ஒருபுறம் என்றால் கூடுதல் வாடகைக்கு எடுத்ததால் விலையை சற்று உயர்த்தி விற்கும் நிலைக்கும் வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
குறைந்த வாடகைக்கு இருந்து வந்த வியாபாரிகள் நியாயமான விலையில் பொருட்களை விற்று வந்த நிலையில் தற்போது வாடகையை 5, 6 மடங்கு கூட்டியதால் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
பாளையத்தை சுற்றிய 30 க்கு மேற்பட்ட கிராம மக்கள் தேவையான பொருட்களை வாங்க பாளையம் தான் வருவர். மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைக்கும் வகையில் , வணிக வளாக கடைகளை நியாயமான வாடகைக்கு விட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கூடுதல் விலைக்கு விற்பனை
ஏ.ராஜரத்தினம், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர், குஜிலியம்பாறை : 25 ஆண்டு காலமாக டெண்டர் விடாமல் அரசு மதிப்பீட்டின்படி முறையான வாடகைக்கு வியாபாரிகளுக்கு கொடுத்தனர். இதனால் 28 வணிக வளாக கடைகள் மட்டுமின்றி பாளையத்தில் உள்ள 200 கடைகளிலும் நியாயமான விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டெண்டர் எடுத்தவர்கள் கூடுதல் தொகைக்கு வாடகைக்கு எடுத்ததால் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கும் நிலை உள்ளது. பாளையம் பேரூராட்சி நிர்வாகம் மூடப்பட்ட கடைகளை நியாயமான வாடகைக்கு விட்டு மீண்டும் திறக்க வேண்டும்.
வாடகை செலுத்த முடியாது அவதி
எஸ்.ஆறுமுகம், சமூக ஆர்வலர், பாளையம்: பாளையம் வணிகவளாக கடைகள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் கூடுதல் தொகையுடன் வாடகைக்கு விடப்பட்டு வந்தது. தற்போது ஓபன் டெண்டர் விட்டு வாடகையை உயர்த்தி விட்டனர். இதனால் வாடகைக்கு கடைகளை எடுத்தவர்கள் வாடகையை செலுத்த முடியாமல் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் இந்த கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்து உள் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் நோக்கில் கடைகளை எடுத்துள்ளனர். இதனால் ஏலத்தொகை கூடியது. உண்மையாகவே பிழைக்கும் நோக்கில் கடைகளை எடுத்தவர்கள் வாடகையை செலுத்த முடியாமல் மூடிவிட்டனர். மீண்டும் இந்த
7 கடைகளுக்கு மட்டும் டெண்டர் நடத்தி குறைந்த வாடகைக்கு விட வேண்டும்.
தேவை நிர்ணய வாடகை
நா.பொன்னுச்சாமி, வியாபாரி, பாளையம்: 20 ஆண்டுகளுக்கு மேலாக பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தேன். தற்போது ஓபன் டெண்டர் என வைத்து கூடுதல் வாடகையை ஏற்றி விட்டனர். கடையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதால் இரண்டு கடைகளை கூடுதல் வாடகைக்கு எடுத்தேன். தற்போது நடத்த முடியாது என தெரிந்ததால் கடைகளை காலி செய்து விட்டேன். அரசு நிர்ணய வாடகைக்கு முறையாக விட்டால் நடத்த தயாராக இருக்கிறோம்.
பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் கூறும் போது ,''
மூடப்பட்டுள்ள 7 கடைகளுக்கும் மீண்டும் மறு ஏலம் விடும் வகையில், நடவடிக்கை எடுத்து வருகிறோம் ''என்றார்.