ADDED : மே 06, 2024 12:51 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று கோடை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் முதியவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வரும் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் மக்கள் வெளியில் சுற்றித்திரியாமல் தங்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர். சுகாதாரத்துறையினரும் அவசியமில்லாமல் மக்கள் வெளியில் வரவேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தினர். உள்ளாட்சிகள்,அரசியல் கட்சியினர் ரோட்டோரங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து மக்களுக்கு வெயிலை சமாளிக்க ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர்.
இருந்தபோதிலும் வெயிலின் தாக்கம் மக்கள் மத்தியில் குறைந்தபாடில்லை. இந்நிலையில் நேற்று காலை மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை சர்ச் அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஓருவர் வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்து இறந்தார். தெற்கு போலீசார் அவரது உடலை மீட்டு விசாரித்தனர். விசாரணையில் ஒரு வருடமாக அந்த முதியவர் அப்பகுதியில் தனியாக தங்கியிருந்து யாராவது உணவு கொடுத்தால் அதை வாங்கி உண்டு வாழ்க்கை நடத்தியதாகவும்,அவர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.