/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர் ஓட்டிகளை பதம் பார்க்கும் பைபாஸ் ரோடு சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்
/
டூவீலர் ஓட்டிகளை பதம் பார்க்கும் பைபாஸ் ரோடு சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்
டூவீலர் ஓட்டிகளை பதம் பார்க்கும் பைபாஸ் ரோடு சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்
டூவீலர் ஓட்டிகளை பதம் பார்க்கும் பைபாஸ் ரோடு சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்
ADDED : ஜூன் 01, 2024 05:47 AM

ஒட்டன்சத்திரம்: நாகணம்பட்டி வழியாக செல்லும் பைபாஸ் ரோடு பெரிய பள்ளங்களாக மாறி உள்ளதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.
இருளகுடும்பன்பட்டியில் கழிப்பிட வசதி இன்றி திறந்தவெளியையே பயன்படுத்தும் நிலையில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 2 வது வார்டு மக்கள் உள்ளனர்.
செல்லப்பகவுண்டன் புதுார், நாகணம்பட்டி, பெரியாஞ்செட்டிபட்டி, இருளகுடும்பன் பட்டி பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் குப்பையை அள்ளி அப்புறப்படுத்தும் வரை நாகணம்பட்டி தொடக்கப்பள்ளி அருகே குவிக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
நாகணம்பட்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பயன்படுத்தப்படாது திறந்தவெளி கழிப்பிடமாக உள்ளது. பெரியாஞ்செட்டிபட்டி, இருளகுடும்பன்பட்டி பகுதிகளில் பொது கழிப்பறை வசதி இல்லை. கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. புதிய பைபாஸ் ரோட்டில் பாலத்தை அகலப்படுத்தி அதன் கீழ் செல்லும் வடிகாலை பெரிதாக்க வேண்டும்.
பள்ளங்கள் நிறைந்த பைபாஸ் ரோடு
விஜய ரமனேஸ்வரன், வழக்கறிஞர்:நாகணம்பட்டி சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை . இதனால் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை தொடர்கிறது.
நாகணம்பபட்டி பைபாஸ் ரோடு சேதமடைந்து பெரிய பள்ளங்களாக மாறி உள்ளதால் அடிக்கடி டூவீலர்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
பாதியுடன் நிற்கும் சாக்கடை
நல்லுசாமி,விவசாயி: இருளக்குடும்பன்பட்டி சாக்கடையில் கழிவு நீர் தேங்காமல் இருக்க இதை அகலப்படுத்தி புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாஞ்செட்டிபட்டி, இருளகுடும்பன்பட்டி பகுதிகளில் பொது சுகாதார வளாகம் இல்லை. இதனால் திறந்தவெளியே கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தண்ணீர் தேங்கவில்லை
அருள்மணி, கவுன்சிலர் (தி.மு.க.,): இருளக் குடும்பன்பட்டியில் இருந்து செல்லும் சாக்கடை கழிவு நீர் தேங்காமல் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பல முறை பலத்த மழை பெய்தும் இப்பகுதி விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கவில்லை. வார்டு பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் குப்பை தினமும் வாங்கப்படுகிறது. சாக்கடை சுத்தம் செய்யப்படுகிறது.
வார்டு பகுதியில் இருந்த அனைத்து சீமை கருவேல மரங்களும் அகற்றப்பட்டுள்ளன.
பைபாஸ் ரோட்டின் கீழ் உள்ள தண்ணீர் செல்லும் பாதையை பெரிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகணம்பட்டியில் உள்ள கழிப்பிட வளாகத்தை முறையாக பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுக் கழிப்பறையை துாய்மையாக வைத்துக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றார்.