/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
லெக்கையன்கோட்டை பைபாஸ் ரோட்டை கடக்க சிரமப்படும் மக்கள்
/
லெக்கையன்கோட்டை பைபாஸ் ரோட்டை கடக்க சிரமப்படும் மக்கள்
லெக்கையன்கோட்டை பைபாஸ் ரோட்டை கடக்க சிரமப்படும் மக்கள்
லெக்கையன்கோட்டை பைபாஸ் ரோட்டை கடக்க சிரமப்படும் மக்கள்
ADDED : மே 14, 2024 06:14 AM

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோடு லெக்கையன் கோட்டைக்கும்- அரசபிள்ளைபட்டிக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள ரோட்டை கடந்து செல்ல போதிய வசதிகள் இல்லாததால் ரோட்டிற்கு எதிர்ப்புறம் உள்ள கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். வாகன விபத்துகளில் உயிர்ப்பலியும் அதிகரிக்கிறது.
மத்திய தரைவழி போக்குவரத்து துறை மூலம் ஒட்டன்சத்திரத்தில் 159 கோடி மதிப்பீட்டில் புதிய பைபாஸ் ரோடு அமைக்கும் பணி 2017ல் தொடங்கப்பட்டது.
தற்போது போக்குவரத்தும் நடைபெறுகிறது. இந்த ரோடானது திண்டுக்கல் ரோட்டில் லெக்கையன்கோட்டையில் இருந்து அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, கொல்லப்பட்டி, ஒட்டன்சத்திரம், குறிஞ்சி நகர் வழியாக ரோட்டை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது
இரு ரயில்வே மேம்பாலங்கள், தாராபுரம், வேடசந்துார் ரோடு மேம்பாலங்கள் என 10.1 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்ட இந்த ரோட்டில் போக்குவரத்து துவங்கியதில் இருந்தே விபத்துக்கள் பல நடந்து வருகின்றன.
இருசக்கர வாகன விபத்துக்களில் பலியானோர் எண்ணிக்கை அதிகம். இதற்குக் காரணம் முக்கிய இடங்களில் ரோட்டை கடந்து செல்ல எந்த வித வசதியும் செய்து தரப்படவில்லை. முக்கியமாக காவேரியம்மாபட்டி ரோடு சந்திப்பு, குறிஞ்சிநகர் ரோடு செல்லும் வழி , கொல்லப்பட்டி செல்லும் வழியில் அதிக விபத்துகள் நடந்துள்ளன.
வசதிகளை மேம்படுத்துங்க
ஹெரால்ட் ஜாக்சன், செயலாளர், திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேசன், ஒட்டன்சத்திரம்: நாகணம்பட்டி சங்கு பிள்ளைபுதுார் பகுதிகளில் இருந்து கொல்லபட்டி, குட்டில் நாயக்கன்பட்டி, குமராயிபுதுார், செல்லப்ப கவுண்டன்புதுார் பகுதிகளுக்குச் செல்ல பைபாஸ் ரோட்டை கடந்து செல்ல வேண்டும். இப்பகுதியில் சப் வே இல்லாததால் சர்வீஸ் ரோட்டில் சென்று பல கி.மீ. சுற்றி செல்ல வேண்டி உள்ளது.
இதனால் கால விரயம் ஏற்படுவதுடன் எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. இதை கருதி இப்பகுதியில் பைபாஸ் ரோட்டை கடந்து செல்ல வசதி செய்து தர வேண்டும். இதேபோல் ஒட்டன்சத்திரம் நகரில் இருந்து குறிஞ்சி நகர் செல்வதற்கும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
வாகனங்களை இயக்க சிரமம்
என்.சதீஷ்குமார், பா.ம.க., திண்டுக்கல் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர், ஒட்டன்சத்திரம்: புதிய பைபாஸ் ரோட்டில் தாராபுரம் வழித்தடத்தில் செல்வதற்கு கனரக வாகனங்கள் திரும்புவதற்கு போதிய வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இப்பகுதியில் ரவுண்டானா அமைத்தால் வாகனங்கள் எளிதாக திரும்பும். மேலும் ரோட்டுக்கு எதிர்ப்புறத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்வதற்கு எவ்வித வசதிகளும் இல்லாததால் ரோட்டை கடந்து செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. பலர் உயிரிழந்தனர்.
பொதுமக்கள் எளிதாக பைபாஸ் ரோட்டை கடந்து செல்லும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

