ADDED : மே 09, 2024 06:21 AM
லாரி மோதி ஓருவர் பலி
வேடசந்துார்:சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் உதயகுமார் 36. இவரது நண்பர் சேலம் வேப்பிலைப்பட்டியை சேர்ந்த சரவணன் 35. இன்ஜினியர்களான இருவரும் சேலத்திலிருந்து மதுரையை நோக்கி டூவீலரில் சென்றனர். உதயகுமார் டூவீலரை ஓட்டினார். வேடசந்துார் லட்சுமணன்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது சேலத்திலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு சென்ற நாமக்கல் மாவட்டம் தட்டாரபாளையம் பழனிச்சாமி 48, என்பவர் ஓட்டி வந்த சென்ற கண்டெய்னர் லாரி இவர்கள் மீது மோதியது. இதில் உதயகுமார் பலியானார். லாரி டிரைவர் பழனிச்சாமியை,வேடசந்துார் போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.
மோதலில் மூவர் கைது
வடமதுரை:செங்குறிச்சி கம்பிளியம்பட்டி சின்னாம்பட்டியை சேர்ந்த முருகேசன் ஆந்திராவில் நடத்தி வரும் நிதிநிறுவன தொழில் தொடர்பாக ஏற்பட்டது. இதுகுறித்து கிராம பிரமுகர்கள் முன்னிலையில் சின்னாம்பட்டியில் நடந்த பேச்சுவார்த்தை கோஷ்டி மோதலாக மாறவே முருகேசன், அழகுராணி காயமடைந்தனர். இதுதொடர்பாக ரமேஷ் 27, மலைச்சாமி 45, முத்து 55 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். லட்சுமணன், அய்யனார் உள்ளிட்ட மூவரை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் தேடி வருகிறார்.
டிரைவரை தாக்கியவர் கைது
வடமதுரை: நத்தம் பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் பொத்தன். வடமதுரைக்கு பஸ்சை இயக்கியபோது பின்னால் டூவீலரில் வந்த வடமதுரை முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் காளிதாஸ் 26, நீண்ட நேரம் ஹாரன் அடித்தும் வழிவிடவில்லை எனக்கூறி டிரைவரை தாக்கி அவரது அலைபேசியையும் உடைத்தார். காளிதாஸை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார்.
ஆண் பிணம் மீட்பு
நத்தம்: நத்தம் அழகர்கோவில் பழமுதிர்சோலை பகுதியில் உள்ள நாவல் மரம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். எஸ்.ஐ., தர்மர் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
கல்லுாரி மாணவி மாயம்
நத்தம்: நத்தம் மூங்கில்பட்டி - கரடிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் பிருந்தா, 20. இவர் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்தார். மே 3ல் கலலுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. மாணவியின் பெற்றோர் நத்தம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் கைது
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு தலைமை காவலர்கள் சுரேஷ், சதீஷ்குமார், தியாகுவர்மன் கிளாடிஸ் ஆகியோர் கலெக்டர் அலுவலக பாலம் அருகே ரோந்து சென்றனர். அங்கே திண்டுக்கல் பாலக்குட்டை குழந்தைவேலு 43, என்பவர் பொது இடத்தில் நின்று ரோட்டில் செல்பவர்களை தரக்குறைவாக அசிங்கமான வார்த்தைகளால் பேசினார். தாடிக்கொம்பு எஸ்.ஐ.,அருண்நாராயணன்,குழந்தைவேலுவை,கைது செய்து விசாரிக்கிறார்.
6 பேர் மீது வழக்கு
தாடிக்கொம்பு:கள்ளிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த டிரைவர் முத்து 30. மார்ச் 9- ல்
கள்ளக்குறிச்சி குலதெய்வக் கோயிலுக்கு சென்றபோது பஸசில் இடம் பிடிப்பது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு, அதே ஊரை சேர்ந்த பெரியசாமி என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. முத்து மீது குற்ற வழக்கு பதிவானதால் முன் ஜாமீன் பெற்றார். கள்ளிப்பட்டி வடக்குத்தெரு விநாயகர் கோயில் அருகே முத்து சென்றபோது பெரியசாமி, வீரய்யா, சித்ரா, ராமன், ராமாயி, மாரியம்மாள் ஆகியோர் முத்துவை தாக்கினர். அவரை காப்பாற்ற வந்த அவரது மாமா காளிமுத்து, அம்மா வேலாயி, சித்தி செல்லாயி ஆகியோர் தாக்குதலில் சிக்கி காயமானர். தாடிக்கொம்பு சிறப்பு எஸ்.ஐ., அழகர்சாமி, வீரய்யா,பெரியசாமி, சித்ரா, ராமன், ராமாயி, மாரியம்மாள் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.
டூவீலர் மாயம்
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே நாகல் புதுாரைச் சேர்ந்த தனியார் ஊழியர் சிவா 25. உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் நேற்று பணியை முடித்துவிட்டு அவரது வீட்டின் முன்பாக டூவீலரை நிறுத்தி சென்றார். காலையில் வந்து பார்த்தபோது அவரது டூவீலரை மர்ம நபர்கள் திருடியது தெரிந்தது. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி பலி
வடமதுரை:அய்யலுார் கொன்னையம்பட்டி சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி முருகன் 42. பஞ்சம்தாங்கி தனியார் தோட்டத்தில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது தென்னை மரம் ஏறும்போது ரோப் செயல் இழந்ததால் மரத்திலிருந்து தவறி விழுந்தார். படுகாயமடைந்த முருகன் செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை பறித்தவர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் என்.ஜி.ஓ.,காலனியை சேர்ந்தவர் மேகலா50. இவர் சில நாட்களுக்கு முன் டூவீலரில் முத்தழகுபட்டி அருகே சென்றார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் இவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து சென்றார். மேற்கு போலீசார் நேற்று இச்சம்பவத்தில் ஈடுபட்ட தேனி பெரியகுளத்தை சேர்ந்த முத்துப்பாண்டியை20,கைது செய்து அவரிடமிருந்த 2 பவுன் செயின்,டூவீரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.