/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கனமழைக்கு தாக்கு பிடிக்காத கொடைக்கானல் ரோடுகள்
/
கனமழைக்கு தாக்கு பிடிக்காத கொடைக்கானல் ரோடுகள்
ADDED : ஆக 15, 2024 05:34 AM

கொடைக்கானல், : - கொடைக்கானலில் பெய்த கனமழையால் ரோடுகளில் ராட்சத பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது.
கொடைக்கானல் நாயுடுபுரம் குறிஞ்சி ஆண்டவர் கோயில் சந்திப்பு ரோட்டில் கனமழைக்கு ரோடு சேதமடைந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டது.வாகனங்கள் இப்பள்ளத்தை கடந்து செல்ல முடியாது திணறின.
இலகு ரக வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி பழுதாகின. இதனால் மதியம் 2:00 மணி முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலை சீர் செய்ய போக்குவரத்து போலீசார் , பிற துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்காத நிலையில் கொடைக்கானலை சேர்ந்த குமார் கனமழைக்கு இடையே வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் 4 மணி நேரம் ஈடுபட்டார்.
நெடுஞ்சாலைத்துறையினருக்கு பொதுமக்கள் ராட்சத பள்ளம் குறித்து தகவல் தெரிவித்தும் மாலை வரை சீரமைக்க முன்வரவில்லை. வாகனங்கள் பள்ளத்தில் தத்தளித்தபடியே கடந்து சென்றன.
இது போன்று சீனிவாசபுரம் உகார்தேநகர் உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு ரோடுகள் பிளவு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டன.
சீனிவாசபுரம் பகுதியில் தற்போது கட்டமைக்கப்பட்ட கான்கிரீட் சுவர் முழுமையாக சீரமைக்காத நிலையில் மழை நீர் கட்டுமானத்திற்கு இடையே ஊடுருவி சுவர் சரிந்து விழும் அபாய நிலையில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது.
10 செ.மீ., பெய்த மழையால் கொடைக்கானல் ரோடுகள் சேதமடைந்துள்ளன.
நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ராஜன் கூறுகையில்
,''நாயுடுபுரம் பகுதியில் சேதமடைந்த ரோட்டை தற்காலிகமாக சீரமைக்க பணிகள் நடந்து வருகின்றன. மழை ஓய்ந்தபின் சேதம் அடைந்த ரோடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.