/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேடசந்துார் - சென்னைக்கு இல்லை அரசு பஸ் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணத்தால் அவதி
/
வேடசந்துார் - சென்னைக்கு இல்லை அரசு பஸ் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணத்தால் அவதி
வேடசந்துார் - சென்னைக்கு இல்லை அரசு பஸ் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணத்தால் அவதி
வேடசந்துார் - சென்னைக்கு இல்லை அரசு பஸ் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணத்தால் அவதி
ADDED : மே 26, 2024 04:56 AM

வேடசந்துார்: வேடசந்துாரில் இருந்து சென்னை சென்று வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் இப்பகுதி மக்கள் ,கல்லூரி மாணவர்கள் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து சென்னை செல்லும் நிலை உள்ளது.
வேடசந்துாரில் இருந்து நேரடியாக சென்னைக்கு சென்று வர அரசுபஸ் போக்குவரத்து நீண்ட காலமாக இப்பகுதியில் இல்லாமல் இருந்தது. 2011 அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அப்போதைய வேடசந்துார் எம்.எல்.ஏ., பழனிச்சாமி முயற்சியால் இரவு 9:10 மணிக்கு அரசு பஸ் சென்றது. அதே நேரத்தில் சென்னையில் இருந்தும் அரசு பஸ் புறப்பட்டு வேடசந்துார் வந்தது.
இரண்டு பஸ்கள் மாறி மாறி சென்று வந்ததால் இப்பகுதி மக்கள் சென்னை, செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வர வசதியாக இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக பஸ் வசதி நிறுத்தப்பட்டதால் இப்பகுதி மக்கள் கூடுதல் கட்டணங்களை கொடுத்து தனியார் பஸ்களில் செல்லும் நிலை உள்ளது. பலர் திண்டுக்கல், கரூர் பகுதிகளுக்கு சென்று செல்லும் நிலை உள்ளது. வேடசந்துார் தாலுகா பகுதி மக்களின் நலன் கருதி வேடசந்தூரிலிருந்து சென்னைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்.
டிக்கெட் கட்டணமும் அதிகம்
எம்.பாபுசேட், அ.தி.மு.க., நகர செயலாளர், வேடசந்துார்: அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் வேடசந்துாரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து வேடசந்துார் என அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் தாலுகாப் பகுதி மக்கள், கல்லூரி மாணவர்கள் பெரிதும் பயன் பெற்றனர்.
தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டு உள்ளதால் ரூ. 350 கொடுத்து சென்னை சென்ற மக்கள், தனியார் பஸ்களில் ரூ.800 , சீசன் நேரங்களில் ரூ. ஆயிரத்து 200 வரை கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதுவும் இங்கு வரும் தனியார் பஸ்கள் தாராபுரம், ஒட்டன்சத்திரம், பழநியில் இருந்து வரும் நிலையில் அங்கேயே டிக்கெட் நிறைந்து வருகிறது.
கூடுதல் கட்டணத்தால் அவதி
வி.கருப்பையா, வேடசந்துார் : வேடசந்துார், குஜிலியம்பாறை என இரு தாலுகாக்கள் உள்ள இப்பகுதியில் வேடசந்துாரில் இருந்து சென்னைக்கு நேரடியாக செல்ல பஸ் வசதி இல்லை.
தொலை தொடர்பு, போக்குவரத்து வசதிகள் விரைவு படுத்தப்பட்ட நிலையில் சென்னை செல்ல உள்ளவர்கள், திண்டுக்கல் சென்று சென்னை செல்ல வேண்டி உள்ளது. கடந்த காலகட்டங்களில் வேடசந்துாரில் இருந்து துவக்கப்பட்ட சென்னை பஸ் நல்ல முறையில் இயங்கி வந்தது. அதை ஏனோ நிறுத்தி விட்டார்கள். இப்பகுதி மக்கள் தான் கூடுதல் கட்டணங்கள் கொடுத்து அவதிப்படுகின்றனர்.
மீண்டும் இயக்குங்க
டி.தாமோதரன், சமூக ஆர்வலர், வேடசந்துார்: வேடசந்துாரில் இருந்து ரெகுலராக சென்னை செல்ல பஸ் வசதி இருந்தபோது இப்பகுதி மக்கள்,கல்லுாரி செல்லும் மாணவர்கள் பயன் பெற்றனர். தற்போது அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் சென்னை செல்வோர் மட்டுமின்றி சென்னையில் இருந்து வேடசந்துார் நோக்கி வருவோரும் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். தாலுகா தலைநகராக உள்ள வேடசந்துாரிலிருந்து சென்னை சென்ற அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.