/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் 14ம் நுாற்றாண்டு செப்பேடு கண்டெடுப்பு
/
பழநியில் 14ம் நுாற்றாண்டு செப்பேடு கண்டெடுப்பு
ADDED : பிப் 06, 2024 07:14 AM

பழநி : ''பழநியில் 14ம் நுாற்றாண்டை சேர்ந்த ஆயிர வைசிய சமூகத்தின் செப்பேடு கண்டுடெடுக்கப்பட்டதாக,'' தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறினார்.
அவர் கூறியதாவது: செப்பேட்டு மூன்று கிலோ எடை, 49 செ.மீ., உயரம், 30 செ.மீ., அகலம் கொண்டதாக உள்ளது. இதன் விபரம் பட்டயத்தின் இருபுறமும் எழுதப்பட்டுள்ளது.
இது ஆயிர வைசியர் சமூகத்தினர் பழநி மலை முருகனுக்கு திருமஞ்சன வில்வார்ச்சனை, தினசரி பூஜை செய்ய வேண்டி பழநியில் வசிக்கும் செவ்வந்தி பண்டாரத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்த திருமஞ்சன கட்டளையாகும்.
கி.பி., 1363ல் சோப கிருது ஆண்டு தை மாதம் 25 ம் தேதி தைப்பூச நாளில் பெரியநாயகி அம்மன் சன்னதி முன்பாக எழுதி வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 518 பேர் கையொப்பமிட்டுள்ளனர். செப்பு பட்டையின் முகப்பில் விநாயகர், கைலாசநாதர், முருகன், பெரியநாய்டுகி அம்மன், செவ்வந்தி பண்டாரம், ஆயிர வைசியரின் சின்னமான செக்கு வரையப்பட்டுள்ளது.
இதில் 'வையம் நீடுக மாமழை மண்ணுக' என்ற வரியுடன் துவங்கி முருகனின் புகழ், ஐந்து பாடல்கள் பாடப்பட்டு உள்ளது. ஆயிரவைசியரின் பிறப்பு, பெயர் காரணம் உள்ளிட்ட புராணக் கதை சொல்லப்படுகிறது.
பரம சிவன் உலகை உருவாக்க பிரம்மாவை படைத்து பிரம்மாவின் தலையில் இருந்து பிராமணர், தோளில் ராஜாக்கள், தொடையில் வைசியர்கள், பாதத்தில் சூத்திரர்கள் படைத்தான் என கூறுகிறது.
சரஸ்வதி அம்மன் பறித்து போட்ட ஆயிரம் தர்ப்பை புற்கள், ஆயிரம் தாமரை இதழ்கள் வாயிலாக மகரிஷி தெளித்த நீரால் ஆயிரம் வைசிய குலத்தில் ஆயிரம் ஆண்களும், முதல் ஆயிரம் பெண்களும் தோன்றினார்கள் என இச்செப்பேடு கூறுகிறது. ஆயிரவைசியின் குல பெருமை விரிவாக கூறப்படுகிறது.
இவர்கள் மூவேந்தர்களுக்கு முடிசூட்டுபவர். அவ்வை மகிழ பொற் பாடகம் தந்தவர்கள். எதிர்த்த பீடத்திற்கு எதிர்ப்பீடம் இட்டவர்கள். சோழன் பெண் கேட்டு வந்தபோது வாயிலில் கருநாய் கட்டி வைத்து அவமதித்தவர்கள். பாண்டியனின் செண்டை முறித்து தோற்கடித்தவர்கள்.
பொங்கி வந்த காவிரியை பஞ்சால் அடைத்து காவிரிக்கு கரை கண்டவர்கள். இவ்வாறாக குல பெருமை பேசப்படுகிறது.
செவ்வந்தி பண்டாரத்திற்கு அளிக்க வேண்டிய திருமஞ்சன கட்டளைக்கு திருமணம், காதுகுத்து, சீமந்தம், திரட்டி காசு கடை, சவுளிக்கடை, எண்ணெய் கடை, செக்கு மூலம் வசூல் செய்ய வரிப்பணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோத்திரமுடைய 56 தேசங்களில் வசிக்கும் ஆயிரம் வைசியரின் இந்த திருமஞ்சன கட்டளைக்கு கேடு விளைவிப்பவர்களுக்கு காராம் பசுவை கொன்ற சாபம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை ஆதரவு செய்பவர்களுக்கு தைப்பூசத் திருநாளில் முருகனையும், இடும்பா சூரனையும் வணங்கிய பலன் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.