ADDED : நவ 21, 2024 04:55 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தடை பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக நேற்று ஒரு நாளில் 35 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு 410 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் தடை பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் அதை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி தலைமையில் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம்,ஜாபர்சாதிக் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதி டீக்கடைகள்,பேக்கரிகளில் ஆய்வு செய்தனர்.
பதுக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில் 15 கடைகளில் 240 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆத்துார் பகுதிகளில் 15 கடைகளில் 100 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேடசந்துாரில் 5 கடைகளில் 70 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தடை பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்தினால் கடை லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு குற்ற வழக்குககள் பதியப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.