/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.40 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது
/
ரூ.40 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது
ADDED : பிப் 18, 2024 07:07 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத் தில் மகளிர் குழுவிற்கு கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 6 ஆண்டாக தலைமறைவாக இருந்த கடலுார் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்த செல்வராஜ் 50, என்பவரை போலீஸ் தனிப்படையினர் கைது செய்தனர்.
நத்தம் பகுதியை சேர்ந்தவர் மாயழகன் மனைவி நந்தினி தேவி. இவர், திண்டுக்கல் -- மதுரை ரோட்டில் எஸ்.ஆர் நகரில்உள்ள எர்த் டிரஸ்ட் என்ற நிறுவனத்தை மகளிர் சுய உதவிக்குழு கடனுக்காக 8 ஆண்டுகளுக்கு முன் அணுகினார். மகளிர் குழு, வீடு லோன் தருகிறோம். அதற்கு குறிப்பிட்ட தொகையை முன்பணம் கட்ட வேண்டும் என டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நந்தினி தேவி பொதுமக்களிடம் ரூ.40 லட்சம் வரை வசூல் செய்து கட்டி உள்ளார். ஆனால் நிர்வாகம் 2 ஆண்டாக லோன் வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளது. திடீரென நிறுவனமும் மூடப்பட்டு தொடர்பு அலைபேசி எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த நந்தினி தேவி திண்டுக்கல்எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த கடலுார் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்த செல்வராஜை 50, கைது செய்னர்.
விசாரணையில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் எர்த் டிரஸ்ட் நிறுவனம் நடத்தியதும், பல பேரிடம் ரூ. கோடி கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதன் பின் ஜாமினில் வந்த அவர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இந்த வழக்கு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
செல்வராஜை கைது செய்ய ஏ.டி.ஜி.பி. பாலநாகதேவி, ஐ.ஜி., சத்திய பிரியா, எஸ்.பி., கல்யாண்உத்தரவுப்படி டி.எஸ்.பி., குப்புசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அலைபேசி சிக்னல்படி அவரை தேடினர்.
சென்னை குரோம்பேட்டை அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது. 2017 தலைமறைவான செல்வராஜை 6 ஆண்டுகளுக்கு பின் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
போலீசார் கூறுகையில்,'திண்டுக்கல்,தேனி மாவட்டத்தில் எர்த் ட்ரஸ்ட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் திண்டுக்கல் நேருஜி நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்யலாம்' என்றனர்.