/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை
/
உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை
ADDED : ஜன 17, 2025 07:02 AM

திண்டுக்கல்: ''விதிமுறை மீறப்பட்டாலோ, உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்கிறோம்'' என வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ராஜேஸ்வரி தெரிவித்தார்.
வேளாண்மை தரக்கட்டுப்பாடு பணிகள்...
விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் நியாயமான விலையில் தங்கு தடையின்றி உரங்கள் கிடைக்க வழி வகை செய்வதோடு அதனை உறுதி செய்வதுதான் இத்துறையின் மிக முக்கிய கடமையாக உள்ளது. உரம் தொடர்பான விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்துதல், உர விற்பனை சரியான முறையில் விற்பனை நடக்கிறதா, தரமான உரங்கள் கிடைக்கிறதா போன்ற பணிகளையும் மேற்கொள்கிறோம்.
உரக்கடைகள் எண்ணிக்கை ...
மாவட்டத்தில் 22 வகையான வேளாண் பயிர்கள் 1.17 லட்சம் ஹெக்டேரிலும், 175 வகையான தோட்டக்கலைப் பயிர்கள் 1.09 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பயிர்களுக்கு தேவையான உரம் மாவட்டத்திலுள்ள 555 சில்லரை விற்பனை உரக் கடைகள், 70 மொத்த விற்பனையாளர்கள் என 625 உரக் கடைகள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
உரம் இருப்பு ...
தேவையான இருப்பு தேவையான அளவிற்கு வைக்கப்பட்டுள்ளது. தட்டுபாட்டை தவிர்க்க தினமும் இருப்பு குறித்த விவரத்தை ஆய்வு செய்கிறோம். தற்போது வேளாண் சாகுபடிக்கு யூரியா 7719 மெட்ரிக் டன் , டி.ஏ.பி., 593 மெட்ரிக் டன் , பொட்டாஷ் 2886 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 805 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது.
உரங்களின் தரம் ஆய்வு செய்யப்படுகிறதா...
தரமான உரங்கள் விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கலப்பு உரங்கள் உற்பத்தியாகுமிடங்கள் , உர விற்பனை மையங்களில் இருந்து உர மாதிரிகள் எடுத்து உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ரசாயன உரங்கள் மட்டுமல்லாது உயிர், இயற்கை, நுண்ணுட்டம் உட்பட அனைத்து உரங்களின் தரத்தை அறிய மாதிரிகள் எடுக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு செய்யப்படுகிறதா..
சரியான விலையில் உரம் விற்பனை, விலைப்பட்டியல், மிஷின் பில் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதற்காக விவசாயிகள், வியாபரிகள் என பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்கள் உள்ளன. சந்தேகங்கள், புகார்கள் தெரிவித்தால் கூட வட்டார அளவிலான அதிகாரிகள் உட்பட அனைவரும் பதிலளிப்பர். இதோடு விவசாயிகளுக்கு வட்டார அளவில் கூட்டம் நடத்துவது, மாதம் ஒரு முறை உரக்கடையினருக்கு கூட்டம் நடத்துவது போன்ற வழிகளை ஏற்படுத்துகிறோம்.
உரக்கடைகளில் ஆய்வு நடக்கிறதா...
உரக்கடைகளில் ஆய்வு செய்வதென்பது கணக்கில்லை. தேவையின் அடிப்படையில் திடீர் ஆய்வு, புகாரின் அடிப்படையில், குழுக்களாக செல்வது போன்ற பல்வேறு முறைகளில் ஆய்வு மேற்கொள்கிறோம். வட்டார, மாவட்ட என அவ்வப்போது ஆய்வுப்பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறைபாடுகள் இருப்பின் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம்.
விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியது...
முக்கியமாக போதிய விழிப்புணர்வு தேவை. சரியான அளவிலான உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகமான ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மண் பரிசோதனை மேற்கொண்டு பரிந்துரைக்கப்பட்ட அளவிலான உரங்களை அந்தந்த பயிர்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். இதனால் செலவுகள் குறையும். ரசாயனம் மண்ணிற்கு செல்வது தடுக்கப்படும், அரசிற்கும் மானிய செலவு குறைகிறது. உரம் தொடர்பான புகார்களை உரம் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் விவசாயிகள் அதிகாரிகளை எளிதாக அணுகலாம்.
கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா...
உரத்திற்கு வழங்கும் மானியம் நேரடியாக விவசாயிகளை சென்றடைய உர விற்பனையாளர்கள் 'பி.ஓ.எஸ்.,' கருவியை பயன்படுத்தி உரம் விற்க வேண்டும். இதன் மூலம் எந்த கடையில் எந்தளவிற்கு இருப்பு இருக்கிறது என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு விதிமுறைகள் மீறப்பட்டாலோ, கூடுதல் விலைக்கு விற்றாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்கிறோம்.
உரக்கடைகளுக்கு சொல்வது என்ன..
விவசாயிகளுக்கு தரமான உரங்களை சரியான விலையில் கொடுக்க வேண்டுமென உரக்கடை உரிமையாளர்கள் நினைக்க வேண்டும். குறிப்பாக ரசீது கட்டாயம் கொடுத்தாக வேண்டும். ஒரே விவசாயிக்கு அதிக உரங்கள் கொடுக்க கூடாது. எந்த அளவிற்கு தேவையோ அவை மட்டுமே வழங்க வேண்டும் என்றார்.