/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கனவு இல்லம் திட்ட வீடு கட்டுவதில் சிக்கல் தாழ்வழுத்த மின்கம்பி பிரச்னையால் தவிக்கும் பயனாளிகள்
/
கனவு இல்லம் திட்ட வீடு கட்டுவதில் சிக்கல் தாழ்வழுத்த மின்கம்பி பிரச்னையால் தவிக்கும் பயனாளிகள்
கனவு இல்லம் திட்ட வீடு கட்டுவதில் சிக்கல் தாழ்வழுத்த மின்கம்பி பிரச்னையால் தவிக்கும் பயனாளிகள்
கனவு இல்லம் திட்ட வீடு கட்டுவதில் சிக்கல் தாழ்வழுத்த மின்கம்பி பிரச்னையால் தவிக்கும் பயனாளிகள்
ADDED : நவ 20, 2024 05:20 AM

ஆத்தூர் : அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்ட ஒதுக்கீட்டில் வீடு கட்டும் பணியை துவக்கிய சீவல்சரகு விவசாயி நிலத்தின் மீதுள்ள தாழ்வழுத்த மின் கம்பியை இடமாற்றுவதற்காக 2 லட்சம் ரூபாயை மின்வாரியம் கோரியுள்ளது. இதையடுத்து பணி மேற்கொள்ள முடியாமல் சிக்கலில் தவித்து வருகிறார்.
ஆத்துார் ஒன்றியத்தில் 22 ஊராட்சிகள் உள்ளன.இங்குள்ள 1100க்கு மேற்பட்ட வீடுகளுக்கு அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்காக சலுகை விலையில் கட்டுமான பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை இத்தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் ஐ.பெரியசாமி செய்து கொடுத்தார்.
இருப்பினும் மின்வாரியம் சார்ந்த நடைமுறை பிரச்னையால் சீவல்சரகு ஊராட்சி வேலக்கவுண்டன்பட்டியில் கனவு இல்லம் திட்ட வீடு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
இங்குள்ள விவசாயிகள் தனலட்சுமி மகன் ராமர், பழனிவேல் மனைவி மைதிலி ஆகியோர் அருகருகே இத்திட்டத்தில் வீடு கட்டும் பணியை துவக்கினர்.
இந்த நிலத்தின் மீது 15 அடி உயரத்தில் தாழ்வழுத்த மின் கம்பி உள்ள சூழலில் இதனை மாற்றியமைக்க ஜூலை 23ல் ஆத்துாரில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் மின்வாரியத்திடம் விண்ணப்பித்தனர்.
இதையடுத்து சித்தையன்கோட்டை துணை மின் நிலைய அதிகாரிகள் கட்டணமாக 2 லட்சம் ரூபாய் கட்ட வலியுறுத்தினர். இதற்காக ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 990 ரூபாய் செலுத்துவதற்கான கேட்பு நோட்டீஸ் வழங்கினர்.
பணம் செலுத்த முடியாத சூழலில் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விவசாயி ராமர் கூறுகையில், சம்பந்தப்பட்ட நிலத்தின் மேற்பகுதியில் தாழ்வழுத்த மின் கம்பி அமைந்துள்ளதால் கட்டுமான பணிபோது விபத்து அபாயம் தவிர்க்க நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில் 5 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறிய மின் வாரியத்தினர் உயர் அதிகாரிகளிடம் முறையிட்ட பின்பு தற்போது ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 990 ரூபாய் செலுத்த நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
சொந்த குடியிருப்பு கட்ட வசதி இல்லாத சூழலில் அரசு திட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இச்சூழலில் மின் கம்பியை மாற்ற 2 லட்சம் ரூபாய் வரை கேட்டால் நாங்கள் எப்படி செலுத்தி வீடுகளை கட்டி முடிக்க முடியும்'' என்றார்.
மைதிலி கணவர் பழனிவேல் கூறுகையில், '' எங்கள் பகுதியில் ஒரு புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து ஒரு மாதமாகியும் , இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. நிலத்தின் மேல் பகுதியில் உள்ள மின் கம்பிகளை மாற்ற லட்சக்கணக்கில் பணம் செலுத்த வலியுறுத்துகின்றனர்.
வறுமை சூழலில் தவிக்கும் குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு இதற்கான கட்டண விலக்கு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.