/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ் வசதி குறைவால் பரிதவிக்கும் எல்லை கிராம மக்கள்
/
பஸ் வசதி குறைவால் பரிதவிக்கும் எல்லை கிராம மக்கள்
ADDED : அக் 25, 2025 04:46 AM

வடமதுரை: திண்டுக்கல் திருச்சி மாவட்டங்கள் பிரியும் எல்லைப்பகுதியில் இருக்கும் பல கிராம மக்கள் பஸ் வசதி குறைவால் பரிதவிக்கின்றனர்.
அய்யலுார் பேரூராட்சியின் சம்பக்காட்டுபள்ளம், பொட்டிநாயக்கன்பட்டி, தொட்டியூர், கிணத்துபட்டி, கணவாய்பட்டி, கருஞ்சின்னானுார், சுக்காவளி, முடக்குபட்டி, தங்கம்மாபட்டி, வால்பட்டி, செம்பன்பழனியூர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கருணாம்பட்டி, தங்கம்மாபட்டி புதுார், புதுவாடி, மாரியூர் போன்ற கிராமங்களுக்கு பொது போக்குவரத்து வசதியை தருவது தங்கம்மாபட்டி பஸ் ஸ்டாப். திண்டுக்கல் திருச்சி இடையே இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்கள் தங்கம்மாபட்டியில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றன.
இதனால் மக்கள் சிரமமின்றி பயணித்தனர். ஆனால் தற்போது அய்யலுாரில் கூட்டமாக நிற்கும் பயணிகளை ஏற்றி செல்வதில் ஏற்பட்ட போட்டாபோட்டியால் குறைந்த துார தனியார், அரசு விரைவு பஸ்கள் தங்கம்மாபட்டியை புறக்கணிப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
-அவதியின் அளவு அதிகம் ஜே.பாலமுருகன், பத்திர எழுத்தர், தங்கம்மாபட்டி: பொதுவாக பல வழித்தடங்களிலும் அரசு பஸ்களை காட்டிலும் தனியார் பஸ்கள் நடுத்தர கிராமங்களை புறகணிப்பு செய்யாமல் பயணிகள் ஏற்றி இறக்கி செல்கின்றனர். இந்த வகையில் வையம்பட்டி, அய்யலுார் இடையே நடுப்பட்டி, கல்பட்டி, கீரனுார் போன்ற கிராமங்களில் தனியார் பஸ்கள் சேவை வழங்குகின்றன.
திண்டுக்கல் திருச்சி இடையே இயக்கப்படும் குறைந்த துார அரசு விரைவு பஸ்களும் நின்று சென்றன. ஆனால் இவை தங்கம்மாபட்டியை தற்போது புறக்கணிப்பது மிகுந்த பாதிப்பாக உள்ளது.
அதோடு மற்ற வழித்தடங்களை ஒப்பிடுகையில் இவ்வழியில் குறைந்த எண்ணிக்கையிலே தனியார் பஸ்கள் செல்கின்றன. டவுன் பஸ் சேவையும் குறைவாக இருப்பதால் அவதியின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது.
சிரமத்தில் இரு மாவட்ட மாணவர்கள் ஆர்.கருப்பையா, தே.மு.தி.க., நகர துணை செயலாளர், தங்கம்மாபட்டி: அய்யலுார் பேரூராட்சியிலும், புதுவாடி ஊராட்சியிலும் தலா ஒரு வார்டு தங்கம்மாபட்டி என்ற பெயரிலேயே உள்ளது.
தங்கம்மாபட்டி என்ற பெயரில் 1991 வரை ரயில்வே ஸ்டேஷன் செயல்பட்டு இப்பகுதியினர் திருச்சி, திண்டுக்கல்லிற்கு சென்று வந்தனர். பஸ் போக்குவரத்து அதிகரித்த நிலையில் ரயில்வே ஸ்டேஷன் பயன்பாடு குறைந்து மூடப்பட்டது.
இப்பகுதி சார்ந்த 2 மாவட்ட பல கிராம மாணவர்கள் தங்கம்மாபட்டி பஸ் நிறுத்தம் மூலமே வெளியே சென்று வருகின்றனர்.
எல்லையில் இருப்பதால் டவுன் பஸ்கள் குறைவாக உள்ளன. குறைந்த துார சேவையாக இயக்கப்படும் விரைவு பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் ஏற்கனவே நின்று சென்ற பஸ்கள் தற்போது நிற்காமல் செல்வதால் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதற்காக இப்பகுதியினர் பல முறை போராட்டங்களையும் நடத்தி உள்ளோம்.
-முயற்சி எடுக்கிறோம் ஆர்.கருப்பன், பேரூராட்சி தலைவர் (தி.மு.க.,), அய்யலுார்: மணப்பாறையில் இருந்து அய்யலுார் வரை 6 டிரிப் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் சேவை சில ஆண்டுகளாக 2 டிரிப்பாக குறைத்து தற்போது திருச்சி மாவட்டத்திற்குள் இருக்கும் கிராமங்களுக்கு திருப்பி விட்டுள்ளனர்.
இதை மறுபடியும் 6 டிரிப்பாக அதிகரிக்க முயற்சிக்கிறோம். வேடசந்துாரில் இருந்து வடமதுரை, அங்கிருந்து வையம்பட்டி வரை சென்று வரும்படி டவுன் பஸ் சேவை துவக்க வலியுறுத்தி வருகிறோம்.
இதன் மூலம் வடமதுரை வேடசந்துார் இடையேயும், இரு மாவட்டங்களிலும் எல்லையோர கிராமங்களை சேர்ந்தவர்கள் பெருமளவில் பயன் பெறுவர்.
திருச்சி திண்டுக்கல் இடையே இயங்கும் குறைந்த துார அரசு, தனியார் விரைவு பஸ்கள் அனைத்தும் தங்கம்மாபட்டி நின்று செல்ல பேரூராட்சி மூலம் முயற்சி எடுத்து வருகிறோம்.

